இளைஞரின் தலையை துண்டித்து கொன்ற கும்பல் - தலையை தேவாலய வாசலில் வீசிச் சென்ற பயங்கரம்

மதுரையில் நடந்த கொடூர கொலை சம்பவத்தில் எதிரி என நினைத்து தவறுதலாக இளைஞர் ஒருவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-11-16 11:01 GMT
தூங்கா நகரமான மதுரை இப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு ஊராக மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் நடக்கும் கொடூர கொலைகளால் போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை. அப்படி ஒரு சம்பவம் தான் மதுரை கீழ வெளி பகுதியில் நடந்திருக்கிறது... 

அதிமுக பிரமுகரான மறைந்த ராஜபாண்டி குடும்பத்தினருக்கும், திமுக பிரமுகர் வி.கே.குருசாமிக்கும் இடையே பல ஆண்டு கால முன்பகை. இவர்களின் பகை இதுவரை 15 உயிர்களை குடித்திருக்கிறது. இந்த வரிசையில் மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த 16வது கொலை படுபயங்கரம்... 

அடுத்தடுத்த கொலைகள் இருதரப்பிலும் நடந்தாலும் கூட, எதிரிகளை எப்போதும் பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கமே இரு தரப்புக்கும் இருந்துள்ளது. அப்படி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி கொலைகளும் அரங்கேறி வந்தது. சம்பவத்தன்று திமுக பிரமுகர் குருசாமியின் தரப்பை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜபாண்டி தரப்பை சேர்ந்தவர்களை மிரட்டுவதற்காக சென்றுள்ளது. 

அப்போது கீழவெளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் முனியசாமியை அந்த கும்பல் துரத்தவே, அவர்கள் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் இவர்களுடன் நடந்து  சென்ற உத்தங்குடியை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை காரில் வந்த கும்பல் சுற்றி வளைத்தது. ஆனால் அவரோ இந்த கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என்பதை அறியாத அந்த கும்பல், எதிராளி என நினைத்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்றது. 

பின்னர் அவரின் தலையை துண்டாக வெட்டி எடுத்து அந்த பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வீசிச் செல்லவே பதற்றம் அதிகமானது. மேலும் கைகள், கால்கள் உள்ளிட்ட இடங்களையும் கொடூரமாக கொத்தி வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த முருகானந்தம், காவல்துறை தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. 

போக்குவரத்து சிக்னல் அருகே நடந்த இந்த கொலையில் கொலையாளிகள் யார் என சிசிடிவி கேமராவில் தெளிவாக தெரியவந்தது. இதையடுத்து வி.கே.குருசாமியின் ஆதரவாளர்களான சின்ன அலெக்ஸ், அழகுராஜா உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த இரு தரப்புக்கு இடையே 15 உயிர்கள் பலியாகி இருந்தாலும் கூட, தொடரும் கொலைகளுக்கு எப்போது விடிவுகாலம் கிடைக்கும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பு.....
Tags:    

மேலும் செய்திகள்