சிபிஐ காவல் இன்று நிறைவு... மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்...

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில், சிபிஐ காவலில் உள்ள 5 போலீசாரும் இன்று மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Update: 2020-07-16 01:59 GMT
சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், முதற்கட்டமாக ஐந்து போலீசாரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல் நாளில், 
தலைமை காவலர் முத்துரா​ஜை சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் பென்னிக்ஸின் மொபைல் கடைக்கு அழைத்து சென்று நடந்தது பற்றி விசாரித்து வீடியோவில் பதிவு செய்தனர்.

 
இரண்டாவது நாளான நேற்று  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் மீண்டும் சாத்தான்குளம் அழைத்து வந்து, தந்தை மகனை எங்கு வைத்து தாக்கினார்கள் என்பது உள்ளிட்டவை குறித்து விசாரித்து வீடியோவில் சிபிஐ போலீசார் பதிவு செய்தனர். 
இதுபோல, தந்தை மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது போலவே, இட்ட மொழி சாலையில் 5 பேரையும் வாகனத்தில் சிபிஐ போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதற்கிடையே, எழுத்தர் பியூலாவிடமும் விசாரணை நடைபெற்றது.  இதுபோல, தலைமை காவலர் ரேவதி  சிபிஐ அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து  வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையின்போது சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் கலந்து கொண்டார். சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை நள்ளிரவு 1 மணி அளவில் நிறைவடைந்தது. அதன்பிறகு, 5 பேரையும் மதுரைக்கு சிபிஐ போலீசார் அழைத்துச் சென்றனர். 5 பேரின் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைவதால், இன்று மாலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்


இதனிடையே, எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என தூத்துக்குடி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பந்தமாக மனித உரிமை ஆனையத்தின் துணை கண்காணிப்பாளர் குமார்  தலைமையில், விசாரணை நடைபெற்றது, அப்போது மருத்துவ சான்று வழங்கிய மருத்துவர்கள், கோவில்பட்டி மருத்துவமனை மருத்துவர். பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி ஜெயில் சூப்பிரண்ட் சங்கர், சாத்தான்குளம் காவல் நிலைய  ஆய்வாளர் பெர்னாட் சேவியர்,தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமார், கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மதுரை மத்திய சிறையில் இன்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்