பாம்பைப் பயன்படுத்தி மசாஜ் சேவை - வாடிக்கையாளர்களைக் கவர விநோத முயற்சி

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் பாம்புகளைப் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படுவது பலரையும் பயம் கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Update: 2020-12-31 05:07 GMT
டென்ஷன், மன உளைச்சல், உடல் வலி போன்ற பிரச்சினைகளைப் போக்கி, உடலையும், மனதையும் புத்துணர்ச்சி அடையச் செய்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று BODY மசாஜ்...Thai மசாஜ், Foot மசாஜ், Hot Stone மசாஜ், Fire மசாஜ் என்று இப்படி எத்தனையோ மசாஜ்களை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆனால், பாம்பைப் பயன்படுத்தி மசாஜ் செய்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?...எகிப்து தலைநகர் கெய்ரோவில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள மசாஜ் நிலையம், பாம்பைக் கொண்டு மசாஜ் செய்து பலருக்கும் கிலி ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், அந்த பாம்பு எல்லாம் எங்களுக்கு வெறும் கயிறு என்று சொல்லாமல் சொல்லி, சேவையை தொடங்கி உள்ளது அந்த மசாஜ் நிலையம்....மசாஜ் நிலையத்தின் உரிமையாளரான சப்வாத் செட்கி, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இந்த வித்தியாசமான முறையை கையில் எடுத்து உள்ளார். 

28 வகையான விஷமற்ற பாம்புகளைப் பயன்படுத்தி, முகம், முதுகு உள்ளிட்ட உடற்பாகங்களில் பாம்புகளை படரவிட்டு, 30 நிமிடங்களுக்கு இந்த மசாஜ் செய்யப்படுகிறது.இந்த மசாஜ் மூலம், தசை மற்றும் மூட்டு வலிகள் குறையும் என்றும், ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி பிறக்கும் என்கிறார் மசாஜ் நிலைய உரிமையாளர்....

முதலில் பாம்பைக் கண்டு அச்சம் அடைந்த வாடிக்கையாளர்கள், தற்போது மகிழ்ச்சியுடன் மசாஜ் செய்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்...ஆரம்ப கால சலுகையாக இந்த மசாஜ் சேவை, முதலில் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பலரும், பாம்பு மசாஜுக்கு ஆர்வம் காட்டுவதால், கட்டணமாக சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

இதனிடையே, பாம்பைப் பயன்படுத்தி மசாஜ் செய்யும் காட்சிகள், இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது. வலி போவதற்காக செய்யப்படும் இந்த மசாஜின்போது, பாம்பு நம்மை ஒரு போடு போட்டால், வலி ஒரே அடியாய் போய்விடும் என்று வழக்கம்போல் பகடி செய்யத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

Tags:    

மேலும் செய்திகள்