"திருமணத்தை பதிவு செய்ய வருவோரை அலையவிடக்கூடாது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருமணத்தை பதிவு செய்ய வருவோரை அலையவிடக்கூடாது என சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துரை ஐஜி சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-27 04:13 GMT
சிவகங்கையைச் சேர்ந்த கலாதீஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் இலங்கையைச் பெண்ணை திருமணம் செய்ததால் தனது திருமணத்தை காரைக்குடி சார் பதிவாளார் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், சிறப்பு திருமண சட்டத்தில் தனது திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சிறப்பு திருமணச்சட்டத்தில் மனைவி இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்றோ, இந்திய குடியுரிமை பெற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்றோ கூறப்படவில்லை என தெரிவித்தார். 

திருமணம் செய்தவர்கள் பதிவுத்துறை அலுவலத்தின் எல்லைக்குள் 30 நாட்களுக்கு குறையாமல் வசித்தால் போதும் என்றும்,மணமக்கள் இருவரும் சிறப்பு திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார்களா ? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் குடியுரிமை பெற 2 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் எனவும், 
ஆனால் இந்தியாவில் 2 ஆண்டுகள் வசித்த பிறகு மட்டுமே இந்தியரை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் எனவோ, பிறகு பதிவு செய்ய வேண்டும் எனவோ கிடையாது எனவும் நீதிபதி விளக்கியிருந்தார்.

அதிகாரிகள் தங்களின் கடமைகளை நிறைவேற்ற நீதிமன்ற உத்தரவு வாங்கி வருமாறு விண்ணப்பதாரர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், 
காரைக்குடி சார் பதிவாளர் மனுதாரரின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

மேலும் திருமணத்தை பதிவு செய்வதற்காக வருவோரை சார் பதிவாளர்கள் அலையவிடக் கூடாது எனக்கூறிய நீதிபதி, இதுகுறித்து அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துரை ஐஜி சுற்றறிக்கை அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்