2750 டன் வெடி பொருட்கள் வெடித்து விபத்து - 73 பேர் உயிரிழப்பு - 3,700 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-08-05 03:27 GMT
பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே, இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. முதலில் வெடிகுண்டு தாக்குதல் என அச்சம் நிலவியது. ஆனால்,  துறைமுகப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடையிலான அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்கள் வெடித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடி விபத்தின் சத்தம் 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சைப்ரஸ் தீவு வரை கேட்டுள்ளது. 
1990களில் நிகழ்ந்த உள்நாட்டு போரில் குண்டுகள் வெடித்தது போல வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பெய்ரூட்டில் கட்டிடங்கள் குலுங்கின.  அருகில் உள்ள பிரதமர் அலுவலக கட்டிடம் உட்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. விபத்தில் சிக்கி 73 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

"விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் பதில் 
சொல்ல வேண்டும்" - லெபனான் பிரதமர் ஹசன் எச்சரிக்கை


இதனிடையே, இந்த விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஹசன் டிஅப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தாம் அளிக்கும் வாக்குறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2014க்கு பிறகு லெபனானில் நிகழ்ந்துள்ள இந்த மோசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் நாட்டிற்கு நட்பு நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


பெய்ரூட்டில் 2 வாரம் அவசரநிலை பிரகடனம் - இஸ்ரேல், ஈரான், பிரான்ஸ் நாடுகள் உதவி செய்வதாக உறுதி

வெடிவிபத்தை அடுத்து, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அடுத்த 2 வாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை அந்நாட்டின் அதிபர் மைக்கேல் அவுன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, லெபனான் வெடி விபத்து சம்பவத்துக்கு இஸ்ரேல், ஈரான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் அனுதாபத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், லெபனானுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். 

------
Tags:    

மேலும் செய்திகள்