குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்கள் : மீண்டும் பள்ளிகளுக்கு வருகிறார்களா? - கல்வித்துறை தீவிர ஆய்வு

கொரோனா ஊரடங்கில் குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

Update: 2021-09-05 09:05 GMT
கொரோனா ஊரடங்கில் குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை தொடங்கியிருக்கிறது. இதற்கான முயற்சிகள் என்ன? பார்க்கலாம்.

கொரோனா ஊரடங்கில் பள்ளிகள் இயங்காததால் 2 புள்ளி 9 விழுக்காடு மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளதாகவும், 11 விழுக்காடு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற வட மாவட்டங்களிலும், பட்டாசு தொழில் நடைபெறக்கூடிய விருதுநகர் மாவட்டத்திலும் அதிகளவில் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால், குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு வருகிறார்களா? என்பது குறித்து கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களாக மாறிய பள்ளி மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்வித் துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர முதலில் அவர்களுக்கு மனநல ஆலோசனை அவசியம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்களின் புள்ளிவிவரத்தை, கல்வித்துறை வெளிப்படையாக வெளியிட்டால் சமூக அமைப்புகள் அவர்களுக்கு உதவ வசதியாக இருக்கும் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்கள் முழுமையாக பள்ளிக்கு மீண்டும் திரும்ப, கல்வித்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Tags:    

மேலும் செய்திகள்