தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் : காப்பாற்ற கோரும் வீடியோ - இணையதளத்தில் பரவுகிறது

மருத்துவமனையில் அடைத்து வைத்துள்ளதாக பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டை அவரின் தந்தை மறுத்துள்ளார்.

Update: 2019-01-06 03:26 GMT
திருச்செங்கோட்டை சேர்ந்த  இந்திரா என்ற இளம்பெண் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து, 2 குழந்தைகளுடன், கனடாவில் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம், கனடாவில் இருந்து குழந்தைகளுடன் திருச்செங்கோடு வந்த இந்திரா, பெங்களூரில் மேற்படிப்பு படிக்க செல்வதாக கூறி, குழந்தைகளை தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். இவர் திடீரென, கடந்த நவம்பர் மாதம் 23-ஆம் தேதி, தனது குழந்தைகளை, தந்தை ஒப்படைக்க மறுப்பதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்திராவுக்கு மன நல மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இந்திராவை, தந்தை தங்கவேலும், கணவர் பிராபாகரனும், கரூரில் உள்ள  தனியார் மன நல மருத்துவமனையி்ல் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்தநிலையில், தன்னை மயக்க நிலையில், மருத்துவமனையில் அடைத்து வைத்துள்ளதாக இந்திரா பேசுவது போன்ற, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குற்றச்சாட்டை மறுக்கும் இந்திராவின் தந்தை

இந்த குற்றச்சாட்டை இந்திராவின் தந்தை தங்கவேல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திராவுக்கு சிறு வயது முதலே மன அழுத்தம் இருப்பதாக கூறும் அவர், இந்திராவுக்கு  அறிமுகமான சமூக வலைதள நண்பர்களால்தான் இவ்வளவு பிரச்சினை என குற்றம்சாட்டுகின்றார். சொத்துகளை அபகரிக்க சிலர் இந்த செயலை செய்வதாகவும் இந்திராவின் தந்தை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்