குழந்தையின் பெயரிலேயே ரூ.1000 கோடி... வாய் பிளக்க வைக்கும் சொத்து பட்டியல் - இந்தியாவின் நம்பர் 1 பணக்கார வேட்பாளர்!

Update: 2024-04-24 05:24 GMT

 நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் பெற்றிருக்கும் தெலுங்கு கோடீஸ்வர வேட்பாளர்களை இப்போது பார்க்கலாம்...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரங்களை வேட்பு மனுவோடு பட்டியலிட்டு வருகிறார்கள்...

இதில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பெரும் கவனம் பெற்று வருகிறார்கள்... முதல்கட்ட தேர்தல் களத்தில் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் 717 கோடி ரூபாய் சொத்துக்களோடு கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் டாப் இடத்தில் இருந்தார்.

இப்போது அதை பின்னுக்கு தள்ளும் வகையில் ஆந்திரா, தெலங்கானாவில் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் தொகுதியில் வெளிநாட்டு வாழ் இந்திய மருத்துவர் சந்திர சேகரை களமிறக்கியிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. 1999 ஆம் ஆண்டு இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு அமெரிக்கா சென்றவர், தெலுங்கு தேசம் கட்சியின் வெளிநாட்டு பிரிவு நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

குண்டூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் அவர், தனது குடும்ப சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 785 கோடி ரூபாய் என டிக்ளேர் செய்திருக்கிறார். தன்னுடைய சொத்து மதிப்பு 2 ஆயிரத்து 448 கோடியே 72 லட்சம் ரூபாய் எனவும், தனது மனைவியின் சொத்து மதிப்பு 2 ஆயிரத்து 343 கோடியே 78 லட்சம் ரூபாய் எனவும் தனது குழந்தைகள் பெயரில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் எனவும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார் சந்திர சேகர். தனது குடும்பத்திற்கு அமெரிக்க வங்கியில் ஆயிரத்து 138 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது வரையில் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கும் வேட்பாளர்களில், அதிக சொத்துக்களை கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் டாப் இடத்தில் இருக்கிறார் சந்திரசேகர். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் தெலங்கானா பாஜக வேட்பாளர் கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி...

தெலங்கானா மாநிலம் சேவெல்லா தொகுதியில் போட்டியிடும் விஸ்வேஷ்வர் ரெட்டி தனது குடும்ப சொத்து மதிப்பு 4 ஆயிரத்து 568 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஸ்வேஷ்வர் ரெட்டி 895 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 2019 தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவோடு ஒப்பிடும் போதும் அவருடைய சொத்து மதிப்பு 410 சதவீதம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார் விஸ்வேஷ்வர் ரெட்டி. 2013-ல் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய விஸ்வேஷ்வர் ரெட்டி, 2018-ல் காங்கிரசுக்கு தாவினார். பின்னர் 2021 ஆம் ஆண்டு பாஜகவுக்கு சென்றார். இப்போது பாஜக வேட்பாளராக களம் காண்கிறார்... ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலிலும் என்.ஆர்.ஐ. வேட்பாளர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்