"எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது" - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-02-21 15:01 GMT
இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எரிபொருட்களின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, பெட்ரோல் விலை பல மாநிலங்களில் லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளது என்றும்,  
டீசல் விலை உயர்வும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் துயரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை 820 சதவீதமும், பெட்ரோல் மீது 258 சதவீதமாகவும் அதிகரித்து, கடந்த ஆறரை ஆண்டுகளில் 21 லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இரண்டரை மாதங்களில் சிலிண்டரின் விலை 175 ரூபாய் உயர்ந்ததற்கு அரசிடம் முறையான பதில் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ள சோனியாகாந்தி, மக்கள் தங்களின் சுமையை எளிதாக்கவே அரசை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும், சாக்கு போக்குகளை தேடுவதற்கு பதிலாக, தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்