"விமானத்தின் நடு இருக்கையிலும் ஆள் ஏற்றலாம்" - 10 நாட்களுக்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள் நடு இருக்கைகளில் பயணிகளை ஏற்றி வர 10 நாள்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-25 10:31 GMT
பொது மக்களின் உடல் நலம் குறித்து மத்திய அரசு கவலை கொள்ள வேண்டுமே தவிர, விமான நிறுவனங்களின் நலன் குறித்து கவலை கொள்ள கூடாது என்றும் தலை​மை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. விமானங்களில் நடு இருக்கைகளில் பயணிகளை ஏற்றி வர அனுமதிக்கும், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தின் சுற்றறிக்கை கவலை அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா காலத்தில் தோளோடு தோள் அமர்ந்து பயணிப்பது ஆபத்தானது என்றும், இதில் உள்நாடு, வெளிநாடு விமானம் என்ற வேறுபாடில்லை என்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர். விமானத்தில், நடுவில் இருக்கும் இருக்கை காலியாக வைக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றாமல் அனைத்து இருக்கையிலும் பயணிகளை அமர செய்து அழைத்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானி தேவன் கனானி வழக்கு தொடர்ந்தார். மேலும், கொரோனா முடிவுக்கு வரும் வரை,  விமானங்களில் நடு இருக்கை காலியாக வைத்து இயக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், விமானத்தில், நடுவில் இருக்கும் இருக்கை காலியாக வைக்க வேண்டும் என்ற விதியை பின்பற்ற வேண்டும் என்றும், ஏர் இந்தியா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்