தெப்போற்சவம், திருத்தேர் உற்சவம் - பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2024-04-26 07:50 GMT

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் தெப்போற்சவமும், திருத்தேர் உற்சவமும் நடைபெற்றன.மயிலாடுதுறையில் உள்ள ஐயாரப்பர் ஆலயத்தில், ஏழூர் சுவாமிகள் எழுந்தருளும் சப்தஸ்தான பெருவிழா நேற்றிரவு நடைபெற்றது. விழாவில், ஐயாரப்பர், மாயூரநாதர் ஆலயத்தில் சமயக்குரவர்களுக்கு காட்சி கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது. விழாவில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.முசிறியை அடுத்த தா.பேட்டையில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. திருத்தேரில் வீதி வழியாக வந்த செல்வமுத்து மாரியம்மனை விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனையும் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தெப்போற்சவத் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. நீர் நிரம்பியிருந்த தெப்பத்தில், அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வான வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்