பிரான்ஸில் குப்பைகளை சேகரிக்கும் காகங்கள்...
பதிவு: ஆகஸ்ட் 18, 2018, 09:46 AM
ஒரு தண்ணீர்க் குடுவையின் அடியில் இருந்த சிறிதளவு நீரைக் கற்களால் மேலே கொண்டு வந்து தாகத்தைத் தீர்த்துக்கொண்ட காகத்தின் கதையை அறிந்திராதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. அந்த கதையை நினைவூட்டும்  வகையில், பிரான்சில் காகங்களை ஆக்கப்பூர்வான பணிகளுக்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

மேற்கு பிரான்ஸின் வெண்டீ பகுதியில் (Vendee)அமைந்துள்ள Puy du Fou எனும் பிரபலமான வரலாற்று தீம் பார்க்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பிரான்ஸ் அரசு தந்த பயிற்சியின் விளைவு. குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் காகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆறு காகங்களுக்கு, குப்பைகளைச் சேகரிக்கும் விதமாகப் பயிற்சியளித்துள்ளனர். அவை சிகரெட் துண்டுகளையும் மற்ற குப்பைகளையும் சேகரிக்கின்றன.

இயல்பாகவே காகங்கள் ஒவ்வொரு நாளும் தங்களது இரையைத் தேடித்தான் பயணிக்க ஆரம்பிக்கும். ஆனால், இந்தப் பயிற்சியின் மூலம் இரைக்குப் பதிலாகக் குப்பையைச் சேகரிக்க வைத்துள்ளனர். குப்பைகளைச் சேகரித்து ஒரு பெட்டியில் போட்ட பின்னர், அதற்கு கூலியாக,  காகங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஜோசியம் பார்த்த கிளிக்கு, நெல் மணி கொடுப்பது போல.

தற்போதைக்கு ரூக் இன காக்ககைகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், வருங்காலத்தில் சாதாரண மற்ற காக்கைகளையும் ஈடுபத்த திட்டமிட்டுள்ளனர். ரூக் இன காகங்கள் விரைவாக வேலை செய்யக்கூடியவை. 45 நிமிடங்களுக்குள் ஒரு பெட்டியில் குப்பைகளை நிரப்பக்கூடியவை.