``அந்த ஒரு ஓட்டால் வெற்றி, தோல்வி மாறலாம்... அதை விடவே கூடாது’’- 39 கி.மீ. காடு, மலைகளில் நடந்தே பயணம்.. வாய் பிளக்க வைக்கும் தேர்தல் அதிகாரிகள்

Update: 2024-03-29 10:04 GMT

நாடாளுமன்ற தேர்தலில், ஒற்றை வாக்கிற்காக தேர்தல் அதிகாரிகள் 39 கிலோமீட்டர் மலையேறி பயணம் மேற்கொள்ளும் சுவாரஸ்ய சம்பவம் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு. ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறுகிறது...96.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

இந்நிலையில், நூறு சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், முதியவர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்கு முறை நடைமுறப்படுத்தப்பட்டுவருகிறது.

மேலும், பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட பகுதிகளில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தவிர மக்கள் குறைவாக வசிக்கும் குக்கிராமங்கள் முதல் மலைப்பகுதிகள் வரை வாக்குச்சாவடிகள் அமைத்து அனைவரும் ஜனநாயக கடமையாற்றுவதற்கான வழிவகைகளை செய்து வருகிறது.

வாகனங்கள் செல்ல வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு கழுதைகள் மற்றும் குதிரைகள் மூலம் தேர்தல் தளவாட பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சென்று தேர்தலை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அருணாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு வாக்குக்காக கரடுமுரடான மலைப்பகுதியில் 39 கிலோமீட்டர் பயணிக்க தயாராகி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது மாலோகம் கிராமம். இந்த கிராமம் ஹயுலியாங் சட்டசபை தொகுதி மற்றும் கிழக்கு அருணாச்சல பிரதேச லோக்சபா தொகுதியை உள்ளடக்கியது.

இங்கு வசிக்கும் கிராமத்தினர் அருகிலுள்ள வாக்குச் சாவடிக்கு தங்கள் பெயர்களை மாற்றிய நிலையில், 44 வயதான சோகேலா தயாங் மட்டும் தனது வாக்குச் சாவடியை மாற்றவில்லை.

வாக்கு மையம் அமைத்தல் தொடர்பான சட்டத்தின் படி, ஒரு வாக்காளர், வாக்களிக்க 2 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கக்கூடாது என்பதால் இந்த ஒரு பெண்மணியின் வாக்கிற்காக 39 கிலோமீட்டர் தூரத்திற்கு வாக்களிக்கும் இயந்திரம் மற்றும் அதற்கு தேவையான பொருட்களுடன் நடந்தே பயணிக்க தயாராகி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள்.

இதுமட்டுமன்றி, அம்மாநிலத்தில் உள்ள 2 ஆயிரத்து 228 வாக்குச்சாவடிகளில் 228 வாக்குச்சாவடிகளுக்கு நடந்து தான் செல்ல முடியும். இதில் 68 வாக்குச்சாவடிகளுக்கு செல்ல 2 அல்லது 3 நாட்களுக்கு மலையேறி பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்