கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது : பேராசிரியர் சுந்தரமூர்த்திக்கு அறிவிப்பு

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சுந்தரமூர்த்திக்கு, கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-01 09:56 GMT
சென்னை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலிருக்கும் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை, ஆண்டுதோறும் செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞருக்கு, கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை வழங்கி வருகிறது.  

விருது பெறுவோருக்கு 10 லட்சம் பரிசு தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் இருந்த விருதை மொத்தமாக அரசு தற்போது அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவராக பொறுப்பேற்ற பேராசிரியர் சுந்தரமூர்த்திக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வெள்ளலூரில் பிறந்த சுந்தரமூர்த்தி, தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர். சென்னை பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டு பணியாற்றிய அவர், தமிழ் இலக்கிய துறை தலைவர், பதிப்புத்துறை இயக்குநர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.

2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தார். தற்போது அரசு தனக்கு விருதை அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சுந்தரமூர்த்தி கூறியிருக்கிறார். தமிழ் மொழிக்காக வெளிநாடுகளுக்கும் சென்று பணியாற்றியிருக்கும் பேராசிரியர் சுந்தரமூர்த்தி, தமிழக அரசின் திருக்குறள் விருது உட்பட 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்