"சித்ரா தற்கொலை : ஹேம்நாத்தே காரணம்" - அறிக்கை தாக்கல்

சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத்திற்கு ஏற்பட்ட சந்தேகமே அவரின் மரணத்திற்கு காரணம் என விசாரணை நடத்திய நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2021-01-20 12:05 GMT
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் உரிய விசாரணைக்கு பின் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஹேம்நாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், அந்த மனுவில் தனக்கும் சித்ராவுக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், ஹேம்நாத்தின் நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயமோ, தடமோ அவரின் கழுத்தில் இல்லை என சித்ராவின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேகத்தை எழுப்பினார்.ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கில் இடையீட்டு மனுதாரராக அவரது நண்பர் சையது ரோஹித்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்