அரசு தரப்பு சாட்சிக்கு தண்டனை வழங்கப்படுமா?

ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு உள்ள நடைமுறை என்ன, அவருக்கு தண்டனை கிடைக்குமா... சட்டம் என்ன சொல்கிறது. அதுபற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்....

Update: 2020-07-03 08:21 GMT
ஒரு குற்ற வழக்கில், குற்றச் சாட்டுக்களை நிரூபிக்க, வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அரசு தரப்பு சாட்சியமாக மாற்றுவதற்கு குற்ற விசாரணை முறை சட்டம் 306 -வது பிரிவு வகை செய்கிறது.இந்த சட்டப்படி, குற்றத்தில் சம்பந்தப்பட்டு முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டவர் அரசு தரப்பு சாட்சியமாக மாற முடியும். குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர் அரசு தரப்பு சாட்சியமாக மாற விரும்புவதாக போலீசாரிடம் முதலில் வாக்குமூலம் அளிக்க வேண்டும். இந்த வாக்குமூலத்தை  சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி முன் போலீசார் சமர்ப்பிப்பர். இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் வாக்கு மூலத்தை ஆராய்ந்து அவரை நேரில் ஆஜர்படுத்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி உத்தரவிடுவார். நடுவர் மன்ற நீதிபதி முன்பு, நேரில் ஆஜர்படுத்தப்படும் அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்பும் குற்றம்சாட்டப்பட்ட நப​ர், முதலில் தனது குற்றத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும். இதனைத் தொடர்ந்து, அவர் செய்த குற்றம் என்ன என்பதையும், குற்றச் சதியில் சம்பந்தப்பட்டவர்கள் செய்த குற்றம் என்ன என்பதையும் விளக்கி சாட்சியம் அளிக்க வேண்டும். அரசு தரப்பு சாட்சியாக மாறுபவர், தான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனக் கூறமுடியாது. மேலும், அவர் செய்த குற்றத்தையும், மற்றவர்களின் குற்றத்தையும் விளக்கி கூற வேண்டும். ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறுபவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் வரை விடுதலை செய்யப்பட மாட்டார். நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த பிறகே, அவர் விடுதலை செய்யப்படுவார்.நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது, மன்னிப்பு கோருவதால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட மாட்டாது. அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்படுவார்.

Tags:    

மேலும் செய்திகள்