தேவராஜ சுவாமி கோவிலில் தேசிகரின் பிரபந்தம் பாட கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை பாடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-19 09:24 GMT
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை பாட அனுமதி கோரி சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் செப்டம்பர் 21-ல் தேசிகரின் பிரபந்தம் பாட அனுமதி அளித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வழக்கு விசாரணையை அக்டோபர் 22-க்கு தள்ளி வைத்துள்ளார். இதனிடையே, தேசிகரின் பிரபந்தம் பாட தடை கோரி, ஸ்ரீநிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே நீதிபதி மகாதேவன் முன் நிலுவையில் உள்ள வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தேசிகரின் பிரபந்தம் பாட கூடாது என உத்தரவிட்டார். கோவில் என்பது அனைவரின் வழிபாட்டுக்கும் உரிய இடம் என்றும், இதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது  துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் இதுவரை எந்த ஒரு முடிவும் ஏற்படவில்லை என்றும், உலகம் உள்ள வரை இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு வராது என்றும் நீதிபதி வைத்தியநாதன் வேதனை தெரிவித்து உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்