சி.ஐ.ஏ அதிகாரிகளை தாக்கும் ஹவானா நோய் - உலகெங்கும் 130 அமெரிக்க அதிகாரிகள் பாதிப்பு

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுத் துறை அதிகாரி ஒருவருக்கு ஹவானா நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உளவுத்துறை அதிகாரிகளை விரட்டும் விநோத நோய் பற்றி தற்போது பார்க்கலாம்...

Update: 2021-09-25 11:41 GMT
55 ஆண்டுகளுக்கு பிறகு 2016இல், கியூபாவில்  அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. தூதரகம் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் அங்கு பணி புரிந்த சில தூதரக அதிகாரிகளுக்கும், சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கும் மர்மமான நோய் அறிகுறிகள் ஏற்பட்டன. மூளையில் அழுத்தம், தொடர் தலைவலி, தூக்கமின்மை, காது கேளாமை மற்றும் மனக்குழப்பம் போன்ற நோய் அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டன. இதற்கு ஹவானா நோய் அறிகுறிகள் என்று பெயரிடப்பட்டது. ஆனால் இதற்கு என்ன காரணம் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.எதிரி நாடுகளின் உளவுத் துறையினரால், மைக்ரோவேவ் அலைகள் மூலம் இவர்கள் மீது தாக்குதல்  நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், சீனா, ரஷ்யா, போலந்து, ஜார்ஜியா, கொலம்பியா, தைவான், ஆஸ்த்ரியா, உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுமார் 130 அமெரிக்க தூதரக மற்றும் சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ஹவானா நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர்களில் சிலருக்கு பணியில் தொடர முடியாத நிலை உருவாகியதால், கட்டாய் ஓய்வு அளிக்கப்பட்டது. ஒரு சிலருக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கு பயண் மேற்கொண்ட சி.ஐ.ஏ அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸுடன் (Williiam Burns) வந்த சி.ஐ.ஏ அதிகாரி ஒருவருக்கும் ஹவானா நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகின.இது தான் இந்தியாவில் முதல் முறையாக ஏற்பட்ட ஹவானா நோய் அறிகுறிகள் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து வருடங்களாக, ஹவானா நோய் அறிகுறிகளினால் தாக்கப்பட்ட அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ, விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு மைக்ரோவேவ் ஆயுதத்தின் மூலம் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அரசினால் உறுதியாக கண்டறிய முடியவில்லை.இதனால் ஹவானா நோய், ஒரு மர்மமாகவே உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்