தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? - அப்துல் காதர், அவரின் தோழி விசாரணைக்குப் பின் விடுவிப்பு

லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பிடித்து விசாரிக்கப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் உள்ளிட்ட 5 பேரும் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

Update: 2019-08-25 18:45 GMT
திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்த அப்துல் காதர், அடிக்கடி பஹ்ரைன் சென்று வந்துள்ளார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இவர், உதவி வந்ததாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், பஹ்ரைனில் இருந்து கொச்சி வழியாக  தோழியுடன் இந்தியா வந்த அப்துல்காதர், போலீசார் தேடுவதை அறிந்து,  கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைய சென்றார்.  அப்போது என்ஐஏ அதிகாரிகள், இருவரையும்  கைது செய்தனர். விசாரணையில், தனக்கும், தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய அப்துல் காதர், பஹ்ரைனில் சிலருக்கு பணம்கொடுக்க வேண்டி இருந்ததாக தெரிவித்தார். அதனால் அங்கிருந்து 60 கிலோ, வாகன உதிரி பாகங்களை  வாங்கி வந்து கேரளாவில் விற்று பணம் கொடுக்க முடிவு செய்ததாக கூறியுள்ளார். அப்துல்காதர் மற்றும் அவரின் தோழியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இருவரும் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் பிடிக்கப்பட்ட சித்திக்,ஜாகீர், சாதிக் ஆகிய 3 பேரை விசாரணைக்கு பின் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விடுவித்தனர். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக விசாரிக்கப்பட்ட அப்துல் காதருடன் செல்போனில் பேசியிருந்ததால் 3 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. சந்தேகிக்கப்பட்ட அப்துல்காதர் விடுவிக்கப்பட்ட நிலையில், கோவையில் விசாரணை வளையத்தில் இருந்த 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்