இந்தியாவில் வலம் வரும் இலங்கை இசைக் கருவி...

இலங்கையில் தோன்றி இந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த இசைக் கருவியின் பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Update: 2018-09-22 07:49 GMT
காலம் காலமாக பயணித்து வருவது இசை மட்டுமல்ல இசைக் கருவிகளும் தான் தோன்றிய இடம் வேறாக இருந்தாலும், மக்களோடு இரண்டற கலந்து விடுகின்றன, இந்த இசைக் கருவிகள்....அப்படி வந்தது தான் இந்த இசைக் கருவி இந்த இசைக் கருவியின் பெயர் ராவண ஹத்தா ராஜஸ்தான் கோட்டைகளிலும், வீதிகளிலும் மனதை உருக்கும் மெல்லிய இசையை இசைத்துக் கொண்டிருக்கிறது இந்த ராவணஹத்தா. ravanhatta, rawanhattha, ravanastron, ravana hasta veena என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இலங்கையில், ஈழ பண்பாட்டு நாகரிகத்தின் போது இக்கருவி, தோன்றியதாக கருதப்படுகிறது. ராமாயண இதிகாசம் இந்தக் கருவியை உருவாக்கியது என்றும் பேசப்படுகிறது. இலங்கை அரசன் ராவணன், தீவிர சிவபக்தியாளர். தமது பக்தியை வெளிப்படுத்த, அவர் இக்கருவியை மீட்டியுள்ளார். இது, ராவணனின் பிரியமான இசைக்கருவி. 

இறுதிப் போரில் ராவணன் வீழ்த்தப்பட்ட பிறகு, அனுமார் இந்தக் கருவியை இந்தியாவிற்கு கொண்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை வட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில், தொடர்ச்சியாக இந்த இசை ஒலித்து வருகிறது. ராஜஸ்தான் இளவரசர்கள், இதனை ஆர்வமுடன் கற்று வந்துள்ளனர். இந்தக் கருவியை தற்போது, 'நாத் பவாஸ்‌' என்ற சமூக மக்கள் இசைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், `ராவணனே, ராவண ஹத்தாவை தங்கள் சமூகத்துக்கு கொடுத்துள்ளார்' என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ராவணஹத்தா என்ற சிங்கள மொழிச் சொல்லுக்கு `ராவணனின் கை' என்று பொருள். இந்தக் கருவி 90 செ.மீ. மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மெட்டல் பைப்களும் ஒரு முனையில் தேங்காய் ஓடாலும் இணைக்கப்பட்டுள்ளது. அதை மூடியவாறு தோல் சுற்றப்பட்டுள்ளது. அதன் நரம்புகள், குதிரையின் முடிகளாலும் மெல்லிய கம்பிகளாலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை இசைக்க வில் பயன்படுத்தப்படுகிறது. இதனை, 'வயலினின் முன்னோடி' என்கின்றனர். 

அரசர் காலம் முதல் எளிய மக்கள் தங்கள் வலிகளை, உணர்வுகளை, ராவணஹத்தாவின் வழியாகவே உணர்த்தியுள்ளனர். ஒரு காலத்தில் அரசர்களின் மகிழ்ச்சிக்காக இசைக்கப்பட்ட கருவி தற்போது வறுமை, நீரற்ற நிலத்தை எண்ணி இசைக்கின்றன. இசை, காலம் கடந்தும் பயணிக்கும். இசைக் கருவிகளும் அதன் தன்மைக்கேற்ப புலம்பெயரும்‌. அப்படி புலம்பெயர்ந்து, மறக்கப்பட்ட இசைக் கருவிதான் ராவணஹத்தா.
Tags:    

மேலும் செய்திகள்