அமெரிக்க தேர்தலில் எதிரொலிக்கும் கொரோனா தொற்று: பிரசாரத்தில் டிரம்ப் - ஜோபிடன் தரப்பு தொடர்ந்து மோதல்

அமெரிக்கா தேர்தல் அதிபர் வேட்பாளர் டிரம்ப் கொரோனாவை பற்றி கவலைப்படாமல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், கொரோனாவில் இருந்து ஒதுங்கியே ஜோபிடன் பிரசாரம் செய்து வருகிறார்

Update: 2020-10-30 12:55 GMT
கொரோனா தொற்றுக்கு மத்தியில் உலகில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக அமெரிக்க அதிபர் தேர்தல் 3-ஆம் தேதி நடக்கிறது. அந்நாட்டு தேர்தலில் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்பட்ட பிற பிரச்சினைகளையெல்லாம் கொரோனா ஒதுக்கி வைத்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு தேர்தலை கொரோனா ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது.
 பிரசாரம் தொடங்கியதும் சீனாவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்த டிரம்ப், முகக்கவசம் அணியாமல், இயல்பாகவே காணப்பட்டார்.
விரைவில் தொற்று கட்டுக்குள் வந்துவிடும், இந்த மாத்திரையை எடுத்தால் போதும் என்று மிகவும் கூலாகவே இருந்தார். எதிர்தரப்பான ஜனநாயக கட்சி, அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாத டிரம்ப், தொற்று பரவலை ஊக்குவிக்கிறார் என விமர்சனம் செய்தது. ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஆனால், டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சியின் பிரச்சார கூட்டங்களில் இவையனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டது.  கடும் விமர்சனங்கள், எச்சரிக்கைகள் என எதுக்கும் செவிமடுக்காத டிரம்பையும் கொரோனா தொற்றிக்கொண்டது. ஆனாலும்,  தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்த டிரம்ப், சிகிச்சையில் இருக்கும்போதே காரில் முகக்கவசம் அணியாமல் ஹாயாக வெளியே வந்து தொண்டர்களுக்கு கை அசைத்தார்.  இதனையடுத்து, ஜோபிடன் அவருடனான நேரடி விவாதத்தையும் ரத்து செய்துவிட்டார். ஆனாலும், டொனால்டு டிரம்ப் சலிக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனா மூன்றாவது அலையை நோக்கும் நிலையிலும் முழு முடக்கம் எல்லாம் கொண்டுவர மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால், டிரம்ப் கொரோனாவை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஜோபிடன் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பான மோதல், அமெரிக்க தேர்தலில் முடிவில்லாமல் செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்