ஊழியர் மகள் திருமணம்... ஓடோடி வந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்...

Update: 2024-03-02 08:13 GMT

தனது நிறுவன ஊழியரின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள், மணப்பெண் வேலை பார்க்கும் அரசுப்பள்ளிக்கு 1 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

Vovt

தொழிலாளியின் உழைப்பால் தான் நிறுவனமே இயங்குகிறது என்பதை உணர்ந்த முதலாளிகள் எப்போதும் தங்கள் தொழிலாளிகளை நண்பர்களைப் போலத்தான் நடத்துவார்கள் என்பதற்கு இத்திருமணம் ஒரு சிறந்த உதாரணம்...

ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன் நீண்ட காலமாக சிங்கப்பூரில் உள்ள எல் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்... இவரது மகள் முகாவிஜிக்கும் - கார்த்தி என்பவருக்கும் திருமணம் முதுகுளத்தூரில் நடைபெற்றது... பத்திரிகை வைத்து விட்டு வந்த செந்தூர்பாண்டியனுக்கு திருமணத்திற்கு நேரில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் அவர் பணியாற்றும் நிறுவன இயக்குநர் கூலின், வணிக இயக்குநர் ஹான் மிங், திட்ட மேலாளர் டிம்... விழாவுக்கு வந்தவர்களை ராஜ மரியாதையுடன் குதிரை சாரட் வண்டியில் ஏற்றி செண்டை மேளம் முழங்க... ஊர்வலமாக அழைத்து வந்து அதகளப்படுத்தி விட்டார் செந்தூர்பாண்டியன்...

திருமணத்திற்குத் தானே வந்தோம் என்று அல்லாமல் அடுத்து அந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள் செய்த செயலால் ஊர் மக்கள் ஒரு நொடி ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர்... ஆம்... நேராக செந்தூர் பாண்டியன் மகள் முகாவிஜி தற்காலிகமாக பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வண்டியை விடச் சொன்ன 3 பேரும், பள்ளியின் வளர்ச்சிக்காக 1 லட்ச ரூபாயை நன்கொடையாக அறிவித்தனர்... பள்ளியின் சார்பில் கூலின், மிங், டிம் ஆகிய மூவருக்கும் ஆரத்தி எடுத்து, சிலம்பம் சுற்றி, மலர் தூவி பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது... தொடர்ந்து அவர்கள் 1 லட்ச ரூபாய் நன்கொடையை வழங்கினர். மூவரின் தாராள மனதை நினைத்து ஊர் மக்கள் மனமாற பாராட்டினர்...

Tags:    

மேலும் செய்திகள்