தமிழ் பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.சிடம் மோசடி - இணையதள வர்த்தகத்தில் ஏமாந்ததாக ட்விட்டரில் தகவல்

தமிழ் பட இசையமைப்பாளரான சாம் சி.எஸ். இணையதள வர்த்தக நிறுவனத்தில் ஆர்டர் செய்த கடிகாரத்திற்கு பதிலாக பார்சலில் கற்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-09-15 15:37 GMT
தமிழில் வெளியான விக்ரம் வேதா, கைதி, அடங்க மறு உள்ளிட்ட 30க்கும் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி இளம்வயதிலேயே மக்களின் கவனத்தை ஈர்த்தவர் சாம் சி.எஸ். கேரளாவை சேர்ந்த இவர், தன்னுடைய சகோதரரின் பிறந்தநாளுக்கு கடிகாரம் ஒன்றை பரிசளிக்க விரும்பி அதை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். 40 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்த அவர், அதை அப்படியே தன் தம்பிக்கு அனுப்பியுள்ளார் சாம் சி.எஸ். அண்ணன் ஆசையாக அனுப்பிய பார்சலை பிரித்து பார்த்த தம்பிக்கு கிடைத்தது அதிர்ச்சி தான். காரணம் பார்சலின் உள்ளே இருந்தது கற்கள்...  எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் கற்களை அழகாக அடுக்கி வைத்து பார்சலாக வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பி தன் அண்ணனிடம் நடந்ததை கூறியிருக்கிறார். உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டு இருக்கிறார் சாம் சி.எஸ். ஆனால் பணத்தை திருப்பி தர இயலாது என கை விரித்திருக்கிறது அந்த வர்த்தக இணைய நிறுவனம்.. இதனால் கோபமடைந்த சாம் சி.எஸ்., உடனே தனக்கு நடந்ததை ட்விட்டரில் கருத்தாக பதிவிட்டார். கடிகாரத்துக்கு பதிலாக கற்கள் வந்ததாகவும், தன்னுடைய பணம் 40 ஆயிரம் ரூபாய் பறிபோனதாக கூறிய அவர், குறிப்பிட்ட நிறுவனத்தின் அலட்சியமான பதிலையும் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் தன்னை ஏமாற்றிய நிறுவனத்தில் யாரும் பொருட்களை வாங்காதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்து கருத்தை வெளியிட்டு இருந்தார் சாம் சி.எஸ். அவரின் இந்த ட்விட்டர் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவவே, சுதாரித்துக் கொண்டது அந்த நிறுவனம்...சாம் கருத்து தெரிவித்த அதே ட்விட்டரில் பதில் கொடுத்துள்ள நிறுவனம், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது. தங்களின் ஆர்டர் பற்றிய தகவலை கொடுத்தால் உதவுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது 
எல்லாம் சரி தான்...இதுபோன்ற நடவடிக்கை சாதாரண பாமரனுக்கும் நீளுமா? என்பது தான் இங்கே முன்வைக்கப்படும் கேள்வியாக இருக்கறிது.

Tags:    

மேலும் செய்திகள்