"போலீஸ் அதிகாரியாக வேண்டும்" - மகன் கனவு : கல்வி கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் குடும்பமே தற்கொலை

மகனுக்கு, பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே என்ற விரக்தியில், மொத்த குடும்பமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகையில் அரங்கேறியுள்ளது. காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கொண்ட சிறுவன், போலீஸ் சீருடையுடன் சடலமாக கிடந்தது ஊர் முழுவதையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

Update: 2019-06-13 05:44 GMT
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் வீரி குளத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரன், நாகையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான். போதுமான வருமானம் இல்லாத காரணத்தினால், குடும்ப செலவிற்கே பலரிடம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார், நகை செய்யும் தொழிலாளியான செந்தில்குமார்...

இந்த நிலையில், பள்ளி திறந்து 10 நாட்களாகியும், கல்வி கட்டணம் செலுத்தாததால், அதனை உடனடியாக செலுத்துமாறு கூறியுள்ளது பள்ளி நிர்வாகம். இதையடுத்து, மாணவன் ஜெகதீஸ்வரனும், பெற்றோரிடம் தினமும் கட்டணம் கட்டுமாறு கேட்டு வந்துள்ளான். 

பல இடங்களில் பெற்ற கடனையே திருப்பி தராததால், ஜெகதீஸ்வரன் படிப்பு செலவிற்கு பணம் கொடுக்க யாரும் முன்வரவில்லை... போலீசாக வேண்டும் என்ற கனவுடன் படித்துவரும் தனது ஒரே மகனின் கல்வி செலவிற்கு கூட பணம் திரட்ட முடியாத நிலை, செந்தில்குமாரை வேதனையில் ஆழ்த்தியது. இந்த விரக்தியை தனது மனைவியிடம் பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார், செந்தில்குமார், 

விரக்தியின் விளிம்பில் தடுமாறி நின்ற கணவன் மனைவி,  விபரீத முடிவுக்குள் விழுந்துள்ளனர்... அதன் படி, மதிய உணவில் விஷத்தை கலந்து செந்தில்குமார், அவரது மனைவி லெட்சுமி, ஒரே மகன் ஜெகதீஸ்வரன் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, மூவரும் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். 

குறிப்பாக போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு கொண்ட தன் மகனுக்கு, கல்வி கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே என்ற வேதனையில், தற்கொலைக்கு முன்பாக, மகனுக்கு போலீஸ் உடையை அணிவித்துள்ளது செந்தில்குமார் லெட்சுமி தம்பதி... 

போலீஸ் உடையுடன் பெற்றோர் மடியில் சிறுவன் உயிரிழந்து கிடந்தது, உற்றார் உறவினர்கள் மட்டுமின்றி, மொத்த ஊரையும் சோகத்தில் ஆழ்த்தியது.... 
Tags:    

மேலும் செய்திகள்