கேரளாவை அலற வைத்த தங்க கடத்தல் விவகாரம் - சிறையில் இருந்து வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஸ்வப்னா 16 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.

Update: 2021-11-07 00:14 GMT
தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஸ்வப்னா 16 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். 

2020 ஜூன் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதன்பேரில் சோதனை நடத்திய போது கட்டி கட்டியாக தங்கம் கடத்தப்பட்டது உறுதியானது. 

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் இதன் முக்கிய மூளையாக செயல்பட்டது உறுதியானது. இதையடுத்து பெங்களூருவில் பதுங்கியிருந்த ஸ்வப்னா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்புடைய ஷரித், சந்தீப் நாயர் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், கேரள அரசின் முக்கிய பொறுப்பில் இருந்தவருமான சிவசங்கரும் சிக்கினார். பதவி பறிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார் சிவசங்கர். இவரின் கைது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த தங்க கடத்தல் வழக்கை அமலாக்கத்துறை, சுங்கத்துறை, என்ஐஏ என பலதுறைகளும் விசாரித்து வந்தன. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. துபாயிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகத்திற்கு வந்த பார்சல்களில் பெரிய அளவில் தங்கம் கடத்தப்பட்டதும், அதற்கு பலரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலிலும் தங்க கடத்தல் விவகாரம் பேசு பொருளாக இருந்தது. 

இதைத் தொடர்ந்து ஸ்வப்னா மீது என்ஐஏ அதிகாரிகள் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து ஸ்வப்னாவின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதுதொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஸ்வப்னாவுக்கு கடந்த 2 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. 25 லட்சத்துக்கு ஜாமீன் பத்திரம்கொடுக்குமாறு ஸ்வப்னா சுரேசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து உரிய நடைமுறைகள் முடிந்து திருவனந்தபுரம் அட்டா குளங்கரா மகளிர் சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் ஜாமினில் வெளியே விடுதலையானார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் சிறைவாசத்தில் இருந்த ஸ்வப்னா, ஜாமினில் வெளியே வந்துள்ளார். வெளியே இருந்தால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் கூறியிருந்த நிலையில் இப்போது ஸ்வப்னா ஜாமினில் வந்திருப்பது கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
Tags:    

மேலும் செய்திகள்