கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு சரிவு - 1.89 கோடி பேர் வேலையிழப்பு

நாட்டில் மாத ஊதியம் பெறுபவர்களில் 22 சத​வீதத்தினர் வேலை இழந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-08-26 05:27 GMT
கொரோனா ஊரடங்கால்  கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில், மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களில் 22 சதவீதத்தினர் வேலை இழந்துள்ளதாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த காலக்கட்டத்தில் மொத்தம் ஒரு கோடியே பத்து லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

40 வயதுக்கு கீழ் உள்ள வயதினரில் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் ஒரு கோடியே 96 லட்சம் பேர் என அந்த அமைப்பின் தலைவர் மகேஷ் வியாஷ் தெரிவித்துள்ளார். 

இதற்கு காரணம் இளைஞர்களிடம் உள்ள அனுபவம் குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் இளைஞர்களை பணிக்கு அமர்த்த முன்வரவில்லை என கூறப்படுகிறது.

கட​ந்த 2019-2020 ஆம் நிதியாண்டில், நாட்டில் மாத ஊதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 8 கோடியே 61 லட்சம் பேராக இருந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது முறைசாரா வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

2019 - 2020 -ல் 3 கோடியே 17 லட்சமாக இருந்த முறைசாரா தொழில் துறையில் இருந்த வேலைகள் தற்போது, 3 கோடியே 25 லட்சமாக அதிகரித்து உள்ளதாக வியாஷ் தெரிவித்துள்ளார். இது 8 சதவீதம் அதிகரிப்பு என ஆய்வில் தெரியவந்துள்ளது.  

முறைசாரா தொழில்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில்,  முறையாக மாத ஊதியம் பெறுபவர்கள் 22 சதவீதத்தினர் இந்த காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

அதாவது ஒரு கோடியே 89 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என சி.எம்.ஐ.இ. ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்