கொரோனா பரவ காரணமாகிவிடுமா "மாஸ்டர்"?

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு திரைத்துறையினர் இடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-06-05 02:37 GMT
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கொரோனா எப்போது போகும் என்ற கேள்வி எந்த அளவுக்கு இருக்கிறதோ... அதே அளவுக்கு கேட்கப்படும் கேள்வி, மாஸ்டர் எப்போது வரும்?தென்னிந்தியாவின் உச்ச நடிகரான விஜய் நடிப்பில், தரமான இயக்குனர் எனப் பெயர் எடுத்த லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பிரமாண்ட திரைப்படம்தான் மாஸ்டர். தரமான சினிமாவாகவும் ரசிகர்களுக்கு பிடித்த விஜய் படமாகவும் மாஸ்டர் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இதற்கெல்லாம் மேலே விஜய் சேதுபதி என்ற மற்றொரு நட்சத்திரமும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை பிரமாண்டமாக்கி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய திரைப்படம்  மாஸ்டர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு திரைத்துறையையே முடக்கி போட்டுவிட்டது. தற்போது மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், திரை அரங்கங்களும் விரைவில் திறக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அப்படி திரையரங்கங்கள் திறக்கப்பட்டால் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத்தான் திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசித்து வருவதாக செய்தி கசிந்தது. ஆனால், பட அதிபர்கள் இடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஊரடங்குக்கு பின் முதல் படமாக மாஸ்டர் படம் வெளியிடப்பட்டால் அது எதிர்பார்க்கப்படும் வசூலை எட்டாது என்றே அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் கேயார், விஜய் படம் முதலில் வெளியிடப்படுவது ரசிகர்களுக்கும் நல்லதில்லை எனக் கூறியுள்ளார். விஜய் படத்துக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், இதனால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டி இருக்கிறார். மேலும், கடும் கட்டுப்பாடுளோடுதான் ஆரம்பத்தில் திரையரங்கங்களுக்கு அனுமதி கிடைக்கும். அப்போது விஜய் படம் வெளியானால் அது தயாரிப்பாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கேயார் கருத்து தெரிவித்துள்ளார். பொதுவாக விஜய் படங்கள் வெளிவந்தால் அதில் சொல்லப்படும் கருத்துதான் சர்ச்சையாகும். அனால், மாஸ்டர் படம் வெளியாவதே சர்சையாகியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்