தமிழகத்தில் தொடரும் கனமழை

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது
தமிழகத்தில் தொடரும் கனமழை
x
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் விடியவிடிய தொடர் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மிதமான மழையும் தொடர்ந்து கனமழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. கும்பகோணம், தாராசுரம், அம்மாசத்திரம், அசூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரமாக மழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக சம்பா சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலையில் 2 மணி நேரம் கனமழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவில் மிதமாக மழை பெய்ததுடன், வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

திருவண்ணாமலை, செய்யாறு, கீழ்பென்னாத்தூர் வேட்டவலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. நீர் நிலைகள் நிரம்ப உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்