காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு : சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிப்பு

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தொடர்பான உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு : சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிப்பு
x
கடந்த 2015 - 16 ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும், வருமானத்தை மறைத்ததாகவும் கூறி, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், சிவகங்கை தொகுதி எம்.பி.,யாக கார்த்தி சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை  எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு மாற்றம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏதும் வழங்கப்படவில்லை எனவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆதிகேசவலு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்