முதலமைச்சர் சுற்றுப்பயணத்தின் முக்கிய அம்சங்கள்

14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
முதலமைச்சர் சுற்றுப்பயணத்தின் முக்கிய அம்சங்கள்
x
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி, இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமியை, சென்னை விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதே தமது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்று  செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு, புறப்பட்டு சென்றார் முதலமைச்சர். தமது வெளிநாட்டு பயணத்தில் முதல் கட்டமாக இங்கிலாந்து சென்றடைந்த அவர், லண்டனில் ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிட்டார். பின்னர் கிங்ஸ் மருத்துவமனைகளின் கிளைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த‌த்தில் கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். பின்னர் இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு எம்பிகளை முதலமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் தமிழகம் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்றும் தெரிவித்த அவர், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை அவர்களுக்கு சுட்டிக்காட்டினார். பின்னர் லண்டனில் உள்ள கியூ தாவரவியல் பூங்காவை பார்வையிட்ட அவர், தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இங்கிலாந்து பயணத்தின் முத்தாய்ப்பாக லண்டனில் மாணவி ஒருவர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து கவிதை ஒன்றை வழங்கினார். இங்கிலாந்தில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர், செப்டம்பர் ஒன்றாம் தேதி புறப்பட்டு 2 ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். இங்கிலாந்து பயணத்தில் முதலமைச்சருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்ற நிலையில், அமெரிக்க சுற்றப்பயணத்தில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இணைந்தனர். அமெரிக்காவில் Buffallo நகருக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி அங்குள்ள பண்ணையை பார்வையிட்டபோது, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட்ட உள்ள உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.  வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற புதிய திட்டத்தையும் முதலமைச்சர் , தமது அமெரிக்க பயணத்தின் போது தொடங்கி வைத்தார்.  பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு சென்ற‌ அவர், தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இது வசந்தகாலம் என்று வர்ணித்த முதலமைச்சர், தொழில் தொடங்க வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்த‌த்தில் கையெழுத்திட்டன. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் 20 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சான்பிரான்சிஸ்கோ சென்ற‌ அவர், மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா ஆலையை பார்வையிட்டார். பின்னர் புளூ எனர்ஜி நிறுவனத்திற்கு சென்ற முதலமைச்சர் மாசில்லா எரிசக்தி குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்ற முதலைச்சருக்கு விமான நிலையத்தில், அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கு கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு துபாய் சென்ற முதலமைச்சருக்கு, அங்கு வாழும் தமிழர்களும்,  தொழில் முதலீட்டாளர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் துபாய் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு, அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் 5 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் மூலம் தமிழகத்திற்கு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைத்திருப்பதுடன் 10 ஆயிரத்து 800 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் பழனிசாமிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்