மூலிகை மருந்து விற்பனை - ரூ.15 கோடியுடன் தலைமறைவு : 3 பேர் கைது

ஒரு லட்சம் செலுத்தினால், இரண்டரை லட்சம் வழங்கப்படும் என கூறி 15 கோடி ரூபாய் வசூல் செய்து கும்பல் தலைமறைவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலிகை மருந்து விற்பனை - ரூ.15 கோடியுடன் தலைமறைவு : 3 பேர் கைது
x
சதுரங்க வேட்டை படம் போல, ஆசையை தூண்டி விட்டு, பணத்தை மோசடி செய்யும் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் மீண்டும் அதே போல ஒரு சம்பவம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம், ரிலீஃப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் பல்வேறு வகை மூலிகை மருந்துகளை டீலர்கள் மூலம் விற்பனை செய்து வந்தது. இந்த நிறுவனத்தில் தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குநராகவும்,  ஆனந்த், பிரகாஷ் மற்றும் பிரபாகரன் ஆகிய 3 பேர் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் வழங்க உள்ளதாகவும், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், 100 நாட்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் இரண்டரை லட்சம் வழங்குவதாகவும் விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் சுமார் 15 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. முதலில் பணம் செலுத்திய முதலீட்டாளர்களுக்கு தினமும் அவர்களது வங்கி கணக்கில் 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியதால், மேலும் பலரும் இதில் சேர்ந்துள்ளனர். பணம் செலுத்தியதற்கு உத்தரவாதமாக 20 ரூபாய் மதிப்பு ஸ்டாம்ப் பேப்பரில் அக்ரிமெண்ட் எழுதி கொடுத்ததோடு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு தினமும் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாததால், பணம் செலுத்தியவர்கள் பணத்தை திருப்பித்தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். இதனால் தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் பணம் கட்டிய  மகாலட்சுமி, தென்னரசி, சிலம்பரசன் ஆகிய 3 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையை அடுத்து பங்குதாரர் பிரபாகரன், தலைமறைவான தங்கராஜின் தந்தை துரைசாமி, முதலீடு செய்தவர்களுக்கு காசோலை வழங்கிய பொன்னுசாமி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர். மோசடி குறித்து செய்திகள் தொடர்ந்து வந்தாலும், பணத்தை பெருக்குவதற்காக, பணம் கொடுத்து ஏமாறும் நிலை தொடர்ந்து வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்