CAA-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றாரா "மோடியின் மனைவி"?

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
CAA-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றாரா மோடியின் மனைவி?
x
சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது...? இதோ உதாரணத்துக்கு... 

இவர் பெயர் ஜசோதாபென். முஸ்லிம் பெண்களுடன் இவர், அமர்ந்து போராட்டம் நடத்தும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி shaheen bagh என்ற இடத்தில் பெண்கள் பெரும் திரளாக பங்கேற்ற போராட்டத்தில் ஜசோதாபென் பங்கேற்றார் என்ற செய்திதான் இந்த புகைப்படம் வேகமாக பரவக் காரணம். பிரதமர் மோடி கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக அவரின் மனைவியே போராடுகிறார் என்ற குறிப்புடன் எம் ஜே கான் இண்டியன் என்ற பேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 18ஆம் தேதி இந்த புகைப்படம் வெளியானது. 

அது நரேந்திர மோடிக்கு எதிரான புகைப்படம் என்பதாக நினைத்து பலரும் சமூக வலைதளங்களில் பரப்ப தீயாக வேலை செய்தனர். தீபிகா சிங்  என்ற பிரபல வழக்கறிஞர் பேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 20 ஆம் தேதி இந்த புகைப்படத்தை பதிவிட்டார். அதை இதுவரை 1200 பேர் லைக் கொடுத்ததுடன் 257 பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படம் உண்மையானதா?, நரேந்திர மோடியின் சட்டத்திற்கு எதிராக ஜசோதாபென் போராடினாரா? இந்த கேள்விகளுக்கு விடை காணும் முன் ஒரு போராட்டத்தில் ஜசோதாபென் பங்கேற்ற புகைப்படத்தை முன்வைத்து நரேந்திர மோடியை விமர்சிக்க காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜசோதா பெண்ணுக்கும் என்ன உறவு?

இப்போதைய குஜராத் மாநிலத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்தவர் ஜசோதாபென். இவரது 16ஆவது வயதில் 1968 ஆம் ஆண்டு பாரம்பரிய முறைப்படி மோடியுடன் திருமணம் நடைபெற்றது. குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்து வாழ்ந்த சூழலில், மோடி அரசியல் பணியிலும், ஜசோதாபென் ஆசிரியர் பணியிலும் இருந்தனர். 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்புவரை நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் என்ற தகவல் அரசியல் அரங்கில் யாருக்கும் தெரியாது. தனது மனைவி யார் என்பதையே பிரதமர் மோடியின் மறைத்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், ஜசோதாபென் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஜசோதாபென் தான் என்றாலும் அந்தப் போராட்டம் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. அப்படி ஒரு தகவல் வதந்தி. பரவிவரும் அந்த புகைப்படம் போலியானது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி மும்பை குடிசைவாழ் மக்களுக்கு ஆதரவான ஒரு போராட்டம் மும்பையில் நடைபெற்றது. குட் சமரிடன் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஜசோதாபென் பங்கேற்றார். அந்த நிகழ்வின் புகைப்படம் தான் இது.

போராட்டம் நடந்த அன்றே ஆங்கில நாளேடான இந்துவில் இந்த புகைப்படம் வெளியானது. 

குடிசைகள் அகற்றபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த போராட்டம் இது. அதில் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் பங்கேற்றார் என்று டெக்கான் க்ரானிக்கிள் ஆங்கில நாளேடு 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி செய்தி வெளியிட்டது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படம் மும்பையில் நடந்த போராட்டம் என்பதே உண்மை. இந்த புகைப்படம் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று சொல்வது தவறான தகவல்.


Next Story

மேலும் செய்திகள்