பிரதமர் நரேந்திரமோடி, ஒரு உன்னதமான சீர்திருத்தவாதி - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

பிரதமர் நரேந்திரமோடி ஒரு உன்னதமான சீர்திருத்தவாதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
x
வரலாற்றில் சில தினங்கள் நிலைத்து நின்றுவிடும் என்றும், அந்த வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் நீண்டகால வரலாற்றில் இந்த ஆண்டு ஜுலை 30ந் தேதி நிலைத்துவிட்டது என்று தினத்தந்தி நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் மசோதா, மற்ற பல மசோதாக்களை போன்றது அல்ல  என்றும், ஒரு வரலாற்று பிழையை திருத்திய மசோதா அது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்களுக்கு கவுரவத்தையும், மரியாதையையும் மீட்டெடுத்த மசோதா, பாலின சமத்துவத்தை நிலைநாட்டிய மசோதா என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். 

எதிர்க்கட்சிகளிடம் இருந்து தடைகள் வந்தபோதிலும் சமூக சீர்திருத்தம் பற்றி அளித்த வாக்குறுதியை நோக்கி அர்ப்பணிப்புடன் மோடி அரசு தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டும் மசோதாவாக முத்தலாக் மசோதா அமைந்துள்ளது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் சமூகநலனுக்காக ஒரு அரசு தன்னை அர்ப்பணித்து செயல்படுகிறது என்றால், அதை மற்ற கட்சிகள் ஆதரிக்கும் என்பது இயற்கையானது. இதுவே நரேந்திரமோடியின் அரசு என்றும் குறிப்பிட்டுள்ள அமித்ஷா, முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும்தான் முத்தலாக் சட்டம் பொருந்தும் என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் விவாதம் அடிப்படையற்றதாகும் என்று தெரிவித்துள்ளார். 

சமுதாயத்தை சீரமைப்பதற்காகவே சுதந்திர இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்படுவதாகவும், முத்தலாக் ஒரு கிரிமினல் குற்றமா என்று கேட்பவர்கள், இந்து சமுதாயம் தொடர்பான சில நடைமுறைகள் மிக கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படுவதை வசதியாக மறந்துவிடுவார்கள் என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

முத்தலாக் முறையை தடை செய்து சட்டம் இயற்றிய மோடியின் அரசு, புகழப்படுவதற்கு தகுதியான அரசு என்றும், பல்வேறு  பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய ராஜாராம் மோகன்ராவ், ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் ஆகியோர் வரிசையில் மோடியும், சமுதாய சீர்திருத்தவாதியாக இடம்பிடிப்பார் என்பது உறுதி என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்