2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்

2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று மக்களவையில் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்தார்
2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்
x
வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு

ஐந்து லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோர், இனி வருமான வரி கட்டத் தேவையில்லை என, இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று, சில நிபந்தனைகளுடன், ஆறரை லட்சம் வரை வருவாய் ஈட்டுவோரும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று மக்களவையில் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்து பேசினார், மாத ஊதியதாரர்களின் வருமான வரி நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதாக அவர் அறிவித்தார். இரண்டாவது வீடு  வாங்கினால் வீட்டுக்கடன் வரிச் சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். வருமான வரி சலுகையால் மூன்று கோடி மத்திய தர வர்க்கத்தினர் பயனடைவார்கள் என்றும் நிதியமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

வீட்டு வாடகை கழிவுக்கான உச்சவரம்பு ரூ.2.40 லட்சமாக அதிகரிப்பு, அஞ்சலக ​சேமிப்புக்கு ரூ.40,000 வரை சலுகை

வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ஒரு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 புள்ளி 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். இதே போன்று, வைப்பு நிதி சேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வட்டி வருவாய்க்கு 40 ஆயிரம் ரூபாய் வரை வரிச்சலுகையும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்

வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். உலகில் மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி தற்போது ஆறாவது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். நிதிபற்றாக்குறை 3 புள்​ளி 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 2 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வரும் அதேநேரத்தில், பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலங்களுக்கான, மத்திய அரசின் பங்களிப்பு 32 -லிருந்து 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை அளித்து வருகிறோம்"

நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கி இருப்பதாகவும், பினாமி மற்றும் ரேரா சட்டத்தின் மூலம் ரியல் எஸ்டேட் துறை மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட்டு உள்ளது என்றும், கிராமப்புற சுகாதாரம் 98 சதவீதம் என்ற அளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடுமுழுவதும் 5 புள்ளி 4 லட்சம் கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறை முடிவுக்கு வந்துள்ளதாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், தேவைப்பட்டால் கூடுதல் நிதி இந்த திட்டத்திற்கு அதிகரித்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.19,000 கோடி ஒதுக்கீடு

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2019-20 நிதியாண்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூ​ஸ்கோயல் தெரிவித்தார். மேலும், சௌபாக்கியா திட்டத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், 143 கோடி எல்.ஈ.டி. பல்ப் வழங்கியது மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன் அடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் வேளாண் திட்டத்துக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வேளாண் திட்டத்திற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். இதேபோல, பயிர்க்கடன் வழங்க இலக்கு 11 புள்ளி 68 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றும், கோகுல் இயக்கத்திற்கான ஒதுக்கீடு 750 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் அறிவித்தார். மீன்வளத்துறைக்கு என அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும், பசுக்கள் பாதுகாப்புக்காகவும், பசுக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைக்கப்படும் என்றும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு 2 முதல் 5 சதவீதம் வட்டி சலுகையும், கடன்களை உரிய நேரத்தில் செலுத்துபவர்களுக்கு மேலும் மூன்று சதவீதம் வட்டி சலுகை அளிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஓய்வூதிய திட்டமான பிரதம மந்திரி சிரம் யோகி திட்டம் முனைப்புடன் செயல் படுத்தப்படும் என்றும்,  மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்தார். இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு பின்னர், பயனாளிகள் மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்கள் என்றார். உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், 6 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், கௌசல் விகாஸ் திட்டத்தின்கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

"1,00,000 கிராமங்கள், டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்"

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ், 15 புள்ளி 56 கோடி பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில். 70 சதவீத பயனாளிகள் பெண்கள் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். பாதுகாப்புத் துறைக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். உதான் திட்டத்தின் மூலம் சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது என்றும், நாளொன்றுக்கு 27 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும்,முதல் முறையாக உள்நாட்டு நீர்வழித் தடத்தில் சரக்குப் பெட்டகம் கையாளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்வே துறைக்கு ரூ. 64,587 கோடி நீதிஒதுக்கீடு

சூரிய மின்சக்தி உற்பத்தி கடந்த 5 ஆண்டில் 10 மடங்கு அதிகரித்து உள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்வே மூலதனச் செலவு, ஒன்று புள்ளி 58 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும், இதில் ரயில்வே துறைக்கான மத்திய அரசின் உதவி, 64 ஆயிரத்து 587 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். வடகிழக்கு மாநிலங்கள் உரிய உள் கட்டமைப்பு வசதிகளைப் பெறும் என்றும், வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒதுக்கீடு 58 ஆயிரத்து 166 கோடியாக அதிகரிக்கப்படும் எனவும், மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி-யால் நடுத்தர மக்களின் சுமை குறைந்துள்ளது

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், சுதந்திரத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் என்றும்,  இதனால் நடுத்தர மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளது என்றும் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுமை குறைவதாக தெரிவித்த அமைச்சர் பியூஸ்கோய​ல்,   ஜி.எஸ்.டி.யால் வரி கட்டமைப்பு மேம்பட்டு உள்ளதுடன்  வரி வருவாய் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார். வருவாய் சாராசரியாக மாதத்துக்கு 97 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி 5 சதவீதமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட்ஜெட் தாக்கல்-மக்களவை ஒத்தி வைப்பு

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை தி​ங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது,முன்னதாக இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் முன்னோட்டமே பட்ஜெட் - பிரதமர் மோடி கருத்து

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் முன்னோட்டமாக,  இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் சுமார் 3 கோடி பேர் பயன் அடைவார்கள் என்றும் குறிப்பிட்டார். விவசாயிகள் நலன்களுக்காக பட்ஜெட்டில் எண்ணற்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மோடி, பிரதமரின் கிஷான் சமான் நிதி திட்டம் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் கூறினார். 

"நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்" - அருண் ஜேட்லி கருத்து

2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் அனைத்தும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், பொருளாதார சவால்களை புரிந்து கொண்டு, வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், நாட்டிலுள்ள ஏழைகள், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும், நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியையும் மேம்படுத்தும் என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

ஓட்டுக்களை பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கு

பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தலை  எதிர்நோக்குவதற்காக தயாரிக்கப்பட்டது என்றும், ஓட்டுகளை பெறுவதற்கான அறிவிப்புகள் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் காங்கிரஸ் முன்வைத்த பல திட்டங்களை இடைக்கால பட்ஜெட்டில் நகல் எடுத்துள்ளனர் என்றும் தமது டிவிட்டர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். 

"விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்" - அமித்ஷா 

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற பட்ஜெட் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சமன் நிதி திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் கடன் பெறாத விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். 

இடைக்கால பட்ஜெட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 3 கட்டமாக, 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது சிறு விவசாயிகளுக்கு மிகுந்த பலனை கொடுக்கும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்