சீனாவில் ரோபோ வாகனங்கள் - பொருட்களை விநியோகித்து அசத்தல்

சீனாவில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய, ரோபோக்களை பயன்படுத்துகிறது. இதைப் பற்றிய தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

Update: 2021-09-28 14:39 GMT
சீனாவைச் சேர்ந்த ஜேடி டாட் காம் (JD.com) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒரு சிறிய வாகனம் வடிவிலான ரோபோக்களை பெரிய அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. நான்கு சக்கரங்கள் கொண்ட, ஒரு மிகச் சிறிய டெம்போ வேன் போன்ற அமைப்பை கொண்ட இந்த ரோபோ வாகனம், சென்சார் கருவிகள், கேமராக்கள், மிக நவீன கம்யூட்டர்கள் உதவியுடன், தானியங்கி முறையில் சாலைகளில் சென்று, வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு முன்பு காத்திருக்கிறது.

அலைபேசி குறுஞ்செய்தி மற்றும் தானியங்கி முறையிலான அழைப்புகள் மூலம் இந்த ரோபோ வந்துள்ளது பற்றி தகவல் பெறும் வாடிக்கையாளர், சாலைக்கு வந்து, தனது கடவுச் சொல்லை, இந்த ரோபோ வண்டியில் பொருத்தப்பட்டுள்ள திரையில் உள்ளீடு செய்து, அவருக்கு உரிய பொருளை எடுத்துக் கொள்ளலாம். கொரோனா காலகட்டத்தில் , இத்தகைய ரோபோ வாகனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

இவற்றின் பயன்பாட்டினால், பொருட்கள் விநியோகத்தில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்களுக்கு வேலை இழப்போ, இதர பாதிப்புகளோ ஏற்படுவதில்லை என கூறுகிறார், ஜேடி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி காங் கி. ஒரு பணியாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ரோபோ வாகனங்களின் மூலம் அதிக அளவிலான பொருட்கள் விரைவாக விநியோகம் செய்யப்படுவதால், அவரின் சம்பளம் அதிகரிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

ஜேடி நிறுவனத்தின் போட்டியாளர்களான அலிபாபா, மெய்டூன் போன்ற நிறுவனங்களும் இத்தகைய ரோபோ வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன. சீன நகரங்களில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், இத்தகைய ரோபோ வாகனங்கள் தடையில்லாமல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்