"இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது" - பிரதமர் மோடி

ஈகை மனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு சொல்லும்விதமாக திருக்குறளை மேற்கோள் காட்டி, தாய்லாந்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2019-11-03 01:56 GMT
ஈகை மனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு சொல்லும்விதமாக திருக்குறளை மேற்கோள் காட்டி, தாய்லாந்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆசியான் மாநாடு மற்றும் ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். தலைநகர் பாங்காக் நகரில்,  தாய்லாந்து வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த சுவாஸ்தி பிஎம் மோடி என்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி, நினைவு நாணயம் ஒன்றையும்,  'தாய்' மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும்  பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வணக்கம் தெரிவித்து பேச்சை தொடங்கினார். வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ள திருக்குறள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு" என்ற குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, அதற்கு விளக்கமும் அளித்தார். தன்னால் இயன்ற முயற்சி செய்து, ஒருவர் சேர்த்த பொருள் எல்லாம், தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கு என்று நினைக்க வேண்டும்  என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,  இந்தியர்கள் வாழ்க்கை முறையும், இப்படித்தான் இருக்கும் என்று கூறிய போது, அரங்கத்தில் அமர்ந்திருந்தோர் கரகோசம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

தான் தாய்லாந்தில் இருந்தாலும் அந்நிய மண்ணில் இருப்பதாக உணரவில்லை என்றும், இங்குள்ள அனைத்தும் தன்னை சொந்த நாட்டில் இருப்பது போல உணர வைப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தாய்லாந்தின் அரச குடும்பம் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பது, ஆழ்ந்த நட்பு மற்றும் வரலாற்று உறவை வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். தாய்லாந்து இளவரசி மகா ஷக்ரி சமஸ்கிருத மொழியில் புலமைபெற்றவர் என்றும், கலாசாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். பத்ம பூஷன், சமஸ்கிருத சம்மன் ஆகிய விருதுகளை தாய்லாந்து இளவரசிக்கு கொடுத்து நன்றியை தெரிவித்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த பாக்கியம் என்றும் மோடி குறிப்பிட்டார். இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, 130 கோடி இந்தியர்களும் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், வரலாற்றில் முதல் முறையாக 60 கோடி வாக்காளர்கள், வாக்களித்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்