அப்பவே அப்படி... தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி காலங்கள்...

புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.

Update: 2021-03-07 10:25 GMT
புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது. அது பற்றிய தகவலை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

சட்டப் பேரவை தேர்தல் என்பதே, மாநிலத்தில் ஆளும் அரசையும் முதல்வரையும் அமைச்சர்களையும் தேர்வு செய்வதற்குத்தான். ஆனால், அரசியல் கட்சியின் ஆட்சி இல்லாமல் ஆளுநர் தலைமையில் அதிகாரிகளே ஆட்சி செய்யும் நடைமுறையும் இருக்கிறது. அதுதான் குடியரசு தலைவர்ஆட்சி. புதுச்சேரியில் தற்போது அதுதான் அமலில் இருக்கிறது.

அதுபோன்ற நிலைமை, தமிழகத்திலும் 30 ஆண்டுகளுக்கு முன் பல முறை நிகழ்ந்திருக்கிறது. முன்பெல்லாம் ஆளுங்கட்சிக்கு பேரவையில் பெரும்பான்மை இருந்தாலும் கூட மத்தியில் ஆளுகின்ற அரசு நினைத்தால், மாநில அரசை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி விடலாம். அதற்கு அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு உதவி செய்தது.

1989ம் ஆண்டில், கர்நாடகாவில் முதல்வர் பொம்மை தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் அரசை, அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையிலான மத்திய அரசு கலைத்தபோது அந்த நடைமுறை முடிவுக்கு வந்து. பொம்மை தொடர்ந்த வழக்கில், 1994ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பெரும்பான்மை அரசை கலைப்பதற்கு நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெறவேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை அறிவித்தது. அதற்கு முன்பு வரை நாடு முழுவதும் பல்வேறு மாநில கட்சிகளின்  ஆட்சிகளை கலைப்பது சகஜமாக இருந்தது. 

தமிழகத்தில் முதன் முதலில் ஆளுநர் ஆட்சி அமைந்த ஆண்டு 1971. பதவிக்காலத்துக்கு ஓராண்டுக்கு முன்பே பேரவை தேர்தலை சந்திக்க, அன்றைய முதல்வர் கருணாநிதி விரும்பியதால், இரண்டு மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சி அமைந்தது.

அதன்பிறகு, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை இந்திராகாந்தி அமல்படுத்தியபோது, 1976ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. அப்போது, ஒன்றரை ஆண்டு காலம் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது.

இதுபோல, 1977ம் ஆண்டில் முதன்முதலில் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபோது, அந்த அரசு, தனது முழு பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை. 1980ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றதால், மாநிலத்தில் பெரும்பான்மையுடன் இருந்தபோதிலும், மூன்றே ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில், எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. பத்தே ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஆளுநர் ஆட்சியை சந்தித்தது தமிழகம்.

எம்ஜிஆர் மறைந்த போது, அதிமுக பிளவுபட்டதோடு, ஜானகி அம்மாள் தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்தது. அந்த அரசு, தனது பெரும்பான்மையை நிரூபித்தபோது வன்முறை நிகழ்ந்தது. சட்டப்பேரவைக்குள் போலீசார் நுழைந்த சம்பவத்தையும் அன்றைய தமிழகம் பார்த்தது. இதனால், 1988ம் ஆண்டு ஜனவரியில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல் படுத்தியது.

ஓராண்டு காலம் நீடித்த இந்த ஆளுநர் ஆட்சியின்போது, அன்றைய ஆளுநர் அலெக்சாண்டர், ஒரு முதல்வரைப் போலவே செயல்பட்டார் என்பதும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்காக தமிழகத்துக்கு பலமுறை ராஜீவ்காந்தி பயணம் செய்ததும் அன்றைய அரசியலின் பரபரப்பு செய்திகள். 

ஆனால், 1989ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில், திமுக வெற்றி பெற்று 13 ஆண்டுகளுக்கு பின்ஆட்சியை கைப்பற்றியது. நூற்று ஐம்பது எம்எல்ஏக்களுக்கு மேல் அசுர பலத்துடன் இருந்த அந்த ஆட்சியும் கூட, தனது முழு பதவி காலத்தை முடிக்கவில்லை.

சட்டம் ஒழுங்கு, விடுதலைப்புலிகள் ஆதரவு போன்ற காரணங்களை கூறி 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் காந்தி நினைவு நாளில் 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆதரவோடு பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். குடியரசு தலைவராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன். அதுதான் தமிழகத்தின் கடைசி ஆளுநர் ஆட்சி.

அதன்பிறகு, கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அனைத்து அரசுகளுமே, தங்களின் ஐந்து ஆண்டு பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்து வருகின்றன.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற பல அரிய தகவல்களை... இனி வரும் நாட்களில், 'அப்பவே அப்படி' தொகுப்புகளில் தொடர்ந்த பார்க்கலாம்...
Tags:    

மேலும் செய்திகள்