மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பேருந்து - அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு அனுமதி

மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு இரண்டு அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

Update: 2020-03-26 07:12 GMT
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 11 எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பணி காரணமாக நாகப்பட்டினத்தில் பணியாற்றுபவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நாகப்பட்டினத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், மற்றும் தொண்டு நிறுவனத்தினர், மருத்துவ பணிகளுக்காக செல்லுபவர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறையில் இருந்து இரண்டு பேருந்துகளை இயக்கியது. காலை 8மணிக்கு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்தில், அலுவலக பணிகளுக்காக செல்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பயணம் செய்தனர். காவல்துறை சோதனைக்குப்பிறகு இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் அனைவரும் முகக்கவசம் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் நாகப்பட்டினத்திலிருந்து 5மணிக்கு இந்த பேருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்