செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு முன்பு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-10 19:58 GMT

கடந்த 2011 முதல் 2015 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை பெற்று தருவதாக கூறி 2  கோடியே 80 லட்ச ரூபாய் பெற்று மோசடி  செய்ததாக  மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 


இந்த வழக்கில், செந்தில் பாலாஜியின் வீடு மற்றும்  அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனு மீதான விசாரணையின்போது, விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் ஏதும் அனுப்பப்படவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். 


இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்த நாளில், செந்தில் பாலாஜிக்கு  நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.


இந்நிலையில், நீதிபதி ஆதிகேசவலு முன் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்த நாளில், முன் ஜாமீன் வழங்கியதால், உத்தரவில் திருத்தம் செய்யுமாறு முறையிட்டார்.

இதை ஏற்று, ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த நோட்டீஸ் அடிப்படையில், வரும் 14ம் தேதி  விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட நீதிபதி, முன்ஜாமீன் உத்தரவில் திருத்த மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்