ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-20 06:42 GMT
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டராக ஜொலிக்கும் நடிகர் ரஜினி கடந்த, 1991ம் ஆண்டு அதிமுக மீது முதல் எதிர்ப்பை பதிவு செய்து அரசியலுக்கு அச்சாரமிட்டார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 1992ம் ஆண்டு அவர் நடித்த "அண்ணாமலை" திரைப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசினார். தொடர்ந்து, திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை பேசி வந்த ரஜினி, 1995-ம் ஆண்டு நேரடியாகவே பேச ஆரம்பித்தார். அவரது முதல் அரசியல் நேரடி பேச்சு, "தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்" என கொளுத்திப் போட்டதுதான். 

தொடர்ந்து 1996ம்ஆண்டு "ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என ரஜினி அடுத்தடுத்து அதிரடி காட்டினார். 1998ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர், நேரடியாக தனது ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தார். ஆனால், 2001ம்ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாய்ஸ் எதுவும் கொடுக்காமல் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2002 -ம் ஆண்டு ரஜினிக்கு எதிராக பாமக போர்க்கொடி தூக்கியது அவரை அதிகமாக பாதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ரசிகர்கள், 2004 -ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாமகவுக்கு எதிராக களமிறங்கினர்.

அப்போது, ரஜினி, " தைரியலட்சுமி" என ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, 2008 -ம் ஆண்டு காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்தார். தொடர்ந்து, 2014ம் ஆண்டு  மோடி, ஒரு சிறந்த தலைவர்" என ரஜினி பாராட்டி மீண்டும் தனது அரசியல் கருத்தை பதிவு செய்தார். 2017 -ம் ஆண்டு போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 31 - ல் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டினார். இப்போது, சட்டப்பேரவை தேர்தல்  எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்