கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற 'வீதி விருது விழா'

கிராமியக் கலைகளையும், அதனை சார்ந்த கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் நடந்த வீதி விருது விழாவைப் பற்றி விவரிக்கிறது.

Update: 2019-01-21 11:51 GMT
நவீன கால மாற்றங்களில் சிதைந்து வரும் பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது நாட்டுப்புற கலைகள்... திரைப்படம், மேற்கத்திய இசை என மக்களின் விருப்பம் மாறிக் கொண்டிருப்பதால் கிராமிய கலைகளை தேடிச் செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருக்கிறது.. சில கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின் போது மட்டுமே இதுபோன்ற கலைகளை அரிதாக பார்க்க முடியும். கிராமிய கலைகளை மட்டுமே நம்பி வாழும் கலைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள இதுபோன்ற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை லயோலா கல்லூரியில் வீதி விருது விழா நடத்தப்பட்டது.

கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட இந்த விழாவில் 120 கலைகள் மேடையில் நிகழ்த்தப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்... தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது என்கிறார் கல்லூரியின் பேராசிரியர் லெனின். இந்த நிகழ்ச்சியானது சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், கிராமிய கலைகளை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்தும் இங்கே முன்வைக்கப்படுகிறது. 2 நாட்களாக நடந்த இந்த விழாவிற்கு படையெடுத்து வந்து அதை சாத்தியமாக்கிய இளைஞர் கூட்டமே அதற்கு சாட்சியாகவும் இருக்கிறது.

அதேநேரம் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறைவாகவே உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமிய கலைகள் ஒரு பக்கம் அழிந்து வரும் நிலையில் அதை கற்க வருவோரும் இதனால் தயக்கம் காட்டுவதாகவும் கூறுகிறார் மூத்த கிராமிய கலைஞர் ராமகிருஷ்ணன். பெயர் கேள்விப்படாத கலைகளின் பின்னே ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள் ஒளிந்திருக்கும். இதிகாசங்களையும், புராணங்களையும் எளிமையாக புரிய வைக்கும் இந்த கலைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டியது இங்கே அவசியமானது...  இதுபோன்ற விழாக்களை முன்னெடுத்து செல்வோரை ஊக்குவிக்க வேண்டியதும் நம் கடமையும் கூட... 
Tags:    

மேலும் செய்திகள்