அசாமின் அடையாளமாக மாறிய லவ்லினா - முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அசத்தல்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

Update: 2021-08-05 05:18 GMT
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார். யார் இந்த லவ்லினா? பார்க்கலாம்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னால் இந்தப் பெயர் பரவலாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பெயர்தான் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடி தரப் போகிறது என்றும் யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. வளர்ச்சிகளை பெரிதும் கண்டிராத வடகிழக்கு மாநிலமான, அசாமில் உள்ள குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர்தான் லவ்லினா.
இரண்டு சகோதரிகளுடன் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த லவ்லினாவை, ஆரம்பம் முதலே மிகவும் தைரியசாலியாக வளர்த்து உள்ளனர், அவரது பெற்றோர்.பெண் குழந்தைகள் அச்சமின்றி செயல்பட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்த லவ்லினாவின் பெற்றோர், அவரை சிறு வயதிலேயே கிக் பாக்ஸிங் வகுப்புகளுக்கும் அனுப்பி உள்ளனர். மைக் டைசன், முகமது அலி உள்ளிட்ட குத்துச்சண்டை ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாறுதான், சிறு வயதில் லவ்லினா கேட்ட கதைகள்.இதன் விளைவாக, அமெரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை, தனது ஆதர்ச நாயகனாக கருதிய லவ்லினா, குத்துச்சண்டைப் பக்கம் தனது பார்வையை திருப்பினார்.தன் பதின்ம வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவில் மிளிரத் தொடங்கிய அவர், சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை முத்தமிட்டார். இதனையடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளுக்கு தகுதி பெற்ற லவ்லினா, எந்த வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் தற்போது, தடம் பதித்து உள்ளார். 69 கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில், அவர் தோல்வியைத் தழுவினாலும் வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்து, ஓட்டு மொத்த நாட்டையும் கொண்டாட்ட மன நிலைக்கு கொண்டு சென்று உள்ளார். இந்தியாவில் குத்துச்சண்டை என்றவுடன் நம் எண்ணத்தில் சட்டென உதிப்பவர் மேரி கோம். ஆனால், இனி லவ்லினாவுக்கும் நம் மனதில் நிரந்தர இடம் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்