அப்பவே அப்படி... நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்கள்

தமிழக முதலமைச்சர்களில் நீண்ட நாள் பதவியில் இருந்தவர், குறைவான நாள் பதவியில் இருந்தவர் யார் யார் என இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

Update: 2021-02-17 08:23 GMT
அப்பவே அப்படி... நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்கள் 

தமிழக முதலமைச்சர்களில் நீண்ட நாள் பதவியில் இருந்தவர், குறைவான நாள் பதவியில் இருந்தவர் யார் யார் என இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

சட்டப்பேரவை தேர்தல் என்றாலே எல்லோரின் மனதிலும் எழும் கேள்வி, முதல்வர் யார் என்பதுதான். ஒவ்வொரு அரசியல்  கட்சி தலைவர்களின் தீவிர பிரசாரத்தின் இலக்கும் கூட புனித ஜார்ஜ் கோட்டையை பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தான்.இந்தியாவிலேயே மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் மிக அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர் யார் தெரியுமா? மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான்.1969ம் ஆண்டில் தனது 45ஆவது வயதில் முதல்வரான அவர், அதன்பிறகு 1971, 1989, 1996, 2006 பேரவை தேர்தல்களில் வென்று ஐந்து முறை முதலமைச்சராகி இருக்கிறார். அப்படி முதல்வராக அவர் பதவி வகித்த மொத்த காலம் 19 ஆண்டுகள். கருணாநிதி கடைசியாக முதல்வர் பதவியில் இருந்தபோது, அவரது வயது 87. தமிழகத்தின் மிக வயதான முதல்வர் அவர் தான். இரண்டாவது இளம் வயது முதல்வரும் கருணாநிதி தான்.கருணாநிதிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர் ஜெயலலிதா. 1991ல் பதவியேற்றபோது அவரது வயது 43. தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதாதான். அதன்பிறகு 2001, 2011, 2016 என நான்கு சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் அவர் பதவியில் இருந்தது 14 ஆண்டுகள் தான். வழக்கு, சிறை, மரணம் போன்ற காரணங்களால் அவரது பதவி காலம் சுருங்கியது. தமிழகத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தவர்களில் மூன்றாம் இடத்தில் இருப்பவர், எம்ஜிஆர். 1977, 1980, 1984 என தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்ற போதிலும் ஆட்சி கலைப்பு, உடல்நல குறைவு, மரணம் போன்ற பிரச்சினைகளால் 10 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்திருக்கிறார்.எம்ஜிஆருக்கு முன், அவரைப் போலவே, தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் காமராஜர். 1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பதவியேற்ற அவர், 1963ம் ஆண்டு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து ஒன்பதரை ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். அந்த நாள்தான் பின்னாளில் அவரது மறைவு தினமாகவும் அமைந்தது தான் சோகம்.தமிழக அரசியலின் இந்த நான்கு ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் யார் தெரியுமா? தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். 2017ம் ஆண்டு பிப்ரவரியில் பதவியேற்ற அவர் நான்கு ஆண்டுகளைக் கடந்து இதுவரையிலும் சுமார் 1500 நாட்கள் பதவியில் இருக்கிறார்.இவர்கள் ஐவரைத் தவிர பக்தவத்சலம், ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்ற முதல்வர்களின் பதவி காலம் எல்லாம் நான்கு ஆண்டுகளுக்குள் தான் அமைந்தன.அதே நேரத்தில், சுதந்திரத்துக்கு முன், மிக நீண்ட காலம் ஒருவர் முதல்வராக இருந்திருக்கிறார். அவர், வேறு யாருமல்ல...  திராவிட இயக்கங்களின் தாய் கட்சியான நீதிக் கட்சியை சேர்ந்த பனகல் ராஜா. 1921ம் ஆண்டு ஜூலை முதல் 1926 டிசம்பர் வரை தொடர்ந்து ஐந்தரை ஆண்டு காலம் அவர் முதல்வராக இருந்திருக்கிறார்.சரி... தமிழகத்தில் மிக மிக குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் யார் தெரியுமா? அவர் தான் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள். 1988ம் ஆண்டு ஜனவரியில் வெறும் 23 நாட்கள் மட்டுமே அவர் முதல்வராக இருந்தார். அவர்தான் தமிழகத்தின் முதலாவது பெண் முதல்வர் ஆவார்.தமிழக அரசியல் வரலாற்றை புரட்டினால் இன்னும் பல ருசிகர தகவல்கள் இருக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் 'அப்பவே அப்படி' தொகுப்பில் அவற்றையும் பார்ப்போம்..


Tags:    

மேலும் செய்திகள்