"18 எம். எல். ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்" - நீதிபதி சத்தியநாராயணன்

18 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-10-25 05:45 GMT
* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரண்டு அணிகளாக இருந்த பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆண்டு ஒன்றாக இணைந்தனர். 

* இதையடுத்து சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக இருந்த 19 எம்எல்ஏ-க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து, அவர்களில் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

* இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவர் அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து ,3வது நீதிபதி சத்ய நாராயணாவின் விசாரணைக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணை முடிந்து நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை தீர்ப்பளித்தார். அப்போது, சபாநாயகரின் உத்தரவை உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்றும், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய நீதிபதி, வாக்கெடுப்பு நடத்தலாம் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்