காஷ்மீரில் அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல் - எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு

ஜம்மு காஷ்மீரில் பிற மாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்திவரும் வேளையில் எல்லைக்கு சென்ற ராணுவ தளபதி நரவனே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Update: 2021-10-20 04:27 GMT
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. 

அப்பாவி பொதுமக்கள், வெளி மாநில தொழிலாளர்கள் மீது மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.  இம்மாதம் மட்டும் காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  

இதனால் அச்சமடைந்துள்ள சிறுபான்மையின மக்களான காஷ்மீரி பண்டிட்களும், பிற மாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். 

இந்த அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள பாதுகாப்பு படையினர், உளவுத்துறை உள்ளீடுகள் அடிப்படையில் பயங்கரவாதிகள் பதுங்கும் இடங்களை குறிவைத்து பதிலடி தாக்குதலையும் நடத்தி, பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழல் தணிந்து அமைதி சூழல் திரும்பியது. இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களை தாக்கும் வியூகத்தை பாகிஸ்தான் உளவுத்துறை கையில் எடுத்திருப்பதாக உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்றுள்ள ராணுவ தளபதி நரவனே, எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருக்கும் சூழல் மற்றும் ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வரும் 23, 24 ஆம் தேதிகளில் காஷ்மீர் செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்யவிருக்கிறார். 

இதற்கிடையே பூஞ்ச்-ராஜோரி மாவட்ட எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் ஒரு வாரத்திற்கு  மேலாக பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த பயங்கரவாதிகள் கடந்த 2, 3 மாதங்களில் பாகிஸ்தானிலிருந்து பூஞ்ச்-ராஜோரி மாவட்ட எல்லை வனப்பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு வாரத்திற்கு மேலாக தொடரும் இந்த சண்டையில் 9 வீரர்கள் வீர மரணம் அடைந்து உள்ளனர். அங்கு இன்னும் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக களமிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்