ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

Update: 2021-02-26 10:26 GMT
ஆரம்ப காலத்தில் பெரிதும் மக்களால் கண்டுகொள்ளப்படாத ஓடிடி தளங்கள், கொரோனா ஊரடங்கின் போது அசுர வளர்ச்சி அடைந்தன. திரையரங்குகள் மூடப்பட்டதுடன், பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தபோது, அப்படி என்ன தான் இருக்கிறது? என ஓடிடி பக்கம் சென்றவர்கள், தற்போது அதில் தத்தளிக்கின்றனர். ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும், ஓடிடி தளங்கள் ஈசல் போல் கிளம்ப, போட்டிகள் நிரம்பி, வாடிக்கையாளர்களை ஈர்க்க ஓடிடி தளங்கள், பல அப்டேட்களையும் வழங்க தொடங்கின. அதன் வளர்ச்சியாகவே ஓடிடி தளங்கள் தற்போது கட்டுபாடின்றி, கண்டதை ஒளிபரப்பி வருகின்றன.

நாளடைவில் முகம் சுழிக்கும் அளவிற்கு, ஆபாசம், வன்முறை என கட்டுபாடுகள் இன்றி அனைத்தும் ஓடிடியில் களம் காண, ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்களில் சர்ச்சை நிறைந்த பல கருத்துகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், தணிக்கையின்றி சுதந்திரமாக வெளியாவதால், சமூகத்தில் பிளவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்தாக புகார்களும் குவிந்தன. சமீபத்தில் கூட  ஹாட் மல்டி , சிக்கூ,  ப்ளிஸ்மூவிஸ்  உள்ளிட்ட தளங்கள் மீது பெண்களை அநாகரிகமாக சித்தரித்து மற்றும் ஆபாச காட்சிகளை வெளியிட்டதாக மஹாராஷ்டிரா சைபர் கிரமை் போலீசார்  வழக்கு பதிந்தனர்.

அதை தொடர்ந்து தமிழில் கூட 'காட்மேன்' என்ற இணையத் தொடர் குறித்து ஏராளமான  குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்த நிலையில், அத்தொடரின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்தது. தொடரை வெளியிடப்போவதில்லை என்று ஓடிடி நிறுவனம் அதிரடியாக தெரிவித்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள், உச்ச நீதிமன்றம் சென்று வந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இந்த ஓ.டி.டி. தளங்களே காரணம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில், இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம், ஓடிடி இயங்கு தளங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள் ஆகியவை, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது

அதன்படி, திரைப்படங்களுக்கு U, A , U/A என்று தணிக்கை சான்று வழங்குவது போல, ஓ.டி.டி தளங்களும் தங்கள் நிகழ்ச்சிகள் குறித்த சுய சான்று வழங்க வேண்டும் என்றும், ஓடிடியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு 13+, 16+, Adult என வகைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்