புகலூர்-திருச்சூர் மின் வினியோக திட்டம் - ரூ.5,070 கோடி திட்ட மதிப்பீட்டில் துவக்கம்

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ள புகலூர்- திருச்சூர் மின்சார விநியோக திட்டத்தின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்

Update: 2021-02-20 07:44 GMT
5 ஆயிரத்து 70 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் புகலூர்- திருச்சூர் மின்சார விநியோகத் திட்டம் 2,000 மெகா வாட் மின்சாரத்தை தங்கு தடையின்றி எடுத்துவரும் திறன் கொண்டதாகும். தமிழகத்தில் உள்ள புகலூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மடக்கத்தரா வரை 165 கி.மீ நீளத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 138 கி.மீ தூரத்திற்கு பூமிக்கு மேலேயும் 27 கி.மீ தூரத்திற்கு நிலத்திற்கு கீழே செல்லும் வகையிலும் கேபிள் பதிக்கப்படுகிறது. இந்த நிலத்தடி கேபிள் கேரள மாநிலம் வடக்கன் சேரியில் இருந்து மடக்கத்தரா வரை அமைக்கபடுகிறது. மரபு சார்ந்த வழக்கமான முறையுடன் ஒப்பிடுகையில், இதற்கு 35 முதல் 40 சதவீதம் குறைவான நிலமே போதுமானதாகும். இந்த மின் வழித்தடம் நிறைவு பெறும் பட்சத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் இருந்து தமிழகத்தின் புகலூர் வழியாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கேரளாவுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்தத் திட்டம் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும் வகையிலும் நிலங்களை கையகப்படுத்த சிறப்பு பொருளாதார தொகுப்பை மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மக்களின் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை இந்த திட்டம் பூர்த்தி செய்யும் என்றும், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக ரீதியிலான நுகர்வோர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவர் எனவும் கூறப்படுகிறது. மேலும் கொச்சி பெங்களூரு தொழிற் வழித்தடத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற மின்விநியோகம் வழங்க இந்த திட்டம் வழிவகுக்கும்.
Tags:    

மேலும் செய்திகள்