அரசு மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை அறிமுகம்

குறைந்த செலவில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக முழு உடல் பரிசோதனை செய்யும் வசதிகள் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2018-06-08 15:58 GMT
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த பரிசோதனை தற்போது, அரசு மருத்துவமனைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

அம்மா கோல்ட், அம்மா டைமன்ட், அம்மா பிளாட்டினம் என மூன்று பிரிவுகளில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அம்மா கோல்ட் பரிசோதனையில்,  சிறுநீரக பரிசோதனை, சிறுநீரக ரத்த பரிசோதனை,ரத்த வகை பரிசோதனை  உள்ளிட்ட பல்வேறு விதமான ரத்த பரிசோதனைகள் ,  இருதய சுருள் படம், நெஞ்சு ஊடுகதிர் படம், மீயொலி பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகிய சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அம்மா டைமென்ட் பரிசோதனையில், அம்மா கோல்ட் பரிசோதனைகளுடன் சேர்த்து, இதய துடிப்பு அளவீடு, எக்கோ , தைராய்டு , HBA1 ஆகிய பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளன. அம்மா பிளாட்டினம் பரிசோதனையில், அம்மா டைமென்ட் பரிசோதனைகளுடன் சேர்த்து மர்பக சிறப்பு பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதி தன்மை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை வசதிகள் கிடைப்பதால், இதுவரை தனியார் மருத்துவமனைகளில் பல்லாயிரக்கணக்கில் செலவிட்டு வந்த நடுத்தர மக்களும், செலவிற்கு பயந்து முழுஉடல் பரிசோதனையே மேற்கொள்ளாமல் நோயை முற்றவிட்டு வந்த ஏழை எளிய மக்களும் பயனடைவர் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளில் குறைந்த பணத்தில் கிடைக்கும் இந்த சேவையை மக்கள் பயன்படுத்திகொள்ளவேண்டும் என சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுகொண்டார்.
 


Tags:    

மேலும் செய்திகள்