'பொல்லாதவன்' முதல் 'அசுரன்' வரை - வெற்றிப்பாய்ச்சலில் அசுரர் கூட்டணி

அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்... அவர்களது வெற்றிக் கூட்டணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Update: 2021-03-25 06:54 GMT
தமிழ் திரை உலகின் இயக்குநர் - நாயகன் கூட்டணியில் தடம் பதித்த கூட்டணியாக வலம் வருவது இயக்குநர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை வழங்கி வரும் இந்த இருவர் கூட்டணி, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளது. இந்த இருவரின் கூட்டணி அமைவதற்கான ஆதிப்புள்ளி மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராதான். அவரது பட்டறையில் பட்டை தீட்டப்படும் போதுதான் வெற்றிமாறனுக்கும் தனுஷிற்கும் இடையில் நட்பு உதித்தது. பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தான், இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு பல்வேறு தடைகளை தாண்டி, தனுஷை வைத்து படம் இயக்கினார் வெற்றிமாறன். இவர்கள் கூட்டணியின் முதல் படம் பொல்லாதவன். மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவன், தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக நம்பும் ஒரு பைக் தொலைகிறது. அந்த பைக்கை அவன் தேடும் தேடலே 'பொல்லாதவன்'. படமெடுக்க வேண்டும் என்ற பசியில் உள்ள ஒரு உதவி இயக்குநர், வணிக சமரசங்களுக்கு உட்பட்டு இயக்கிய ஒரு சாதாரண படமே பொல்லாதவன் என இந்த படம் குறித்து சுய விமர்சனம் செய்தார், வெற்றிமாறன். பொல்லாதவனைத் தொடர்ந்து ஆடுகளத்தில் கைகோர்த்தது வெற்றி மாறன்-தனுஷ் கூட்டணி. தங்களது இரண்டாவது படமான ஆடுகளத்தில் இந்த கூட்டணி அரங்கேற்றியது, அசாத்திய பாய்ச்சல். முதல் படத்தில் சென்னையை களமாக கட்டமைத்திருந்த வெற்றிமாறன், இரண்டாவது படத்தில் மதுரையை மையமாக்கினார். இந்தக் களத்தின் ஜாக்கியாக வெற்றி மாறன் விளையாடியது வெறும் கதை, திரைக்கதையில் மட்டுமல்ல. மனித மனங்களில் நிகழும் குரூர மாற்றங்களையும் காட்சிப்படுத்தி, 6 தேசிய விருதுகளையும் வென்றார்.

இந்த இருவரின் கூட்டணியில் அடுத்து வந்த படம்  விசாரணை. இம்முறை இயக்குநர் - நடிகர் என்றல்லாமல் இயக்குநர் - தயாரிப்பாளர் உறவில் இருவரும் இணைந்தனர். இப்படத்தின் கதையை கூற முயலும்போது வேண்டாம் என தடுத்த தனுஷ், கதையை கேட்டால்  இந்தப் படத்திலும் தான் நடிக்க வேண்டும் என தோன்றும் என்பதால் கதையை கேட்காமல் படத்தை தயாரிக்க மட்டும் ஒப்புக் கொண்டாராம். எழுத்தாளர் சந்திரகுமாரின் 'லாக்கப்' நாவலை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் வெற்றிமாறன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது, காவலர்களால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள். சாத்தான்குளம் சம்பவத்தின் போது அனைவரும் முதலில் நினைவு கூர்ந்தது, 'விசாரணை' திரைப்படம்தான் அந்த அளவிற்கு இப்படம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது கனவு படம் என வெற்றிமாறன் எடுத்த அடுத்த படம் 'வடசென்னை'. அன்பு என்ற ஆஸ்தான கதாபாத்திரம் மூலம், நிலத்திற்காக நடைபெறும் அதிகார மோதல்களில் உருவாக்கப்படும் ரவுடிகளின் கதையை 'வட சென்னை' பின்புலத்துடன் எடுத்துரைத்தது. இதனைத் தொடர்ந்து, வெற்றி தனுஷ் கூட்டணியில், கரிசல் மண்ணின் வெக்கையுடன் வெளிவந்த படம்தான் அசுரன். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அதே வெக்கையுடன், அசுரனில் வெளிப்படுத்தியிருந்தார் வெற்றிமாறன். 

கொல்லத் துடிக்கும் ஆதிக்க சக்திகளிடம் இருந்து தனது மகனை காப்பாற்றும் கதாபாத்திரம் என்றாலும் வெற்றிமாறன் இதில் பாய்ச்சியது குத்தீட்டி. நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் கருவி கல்விதான். படித்து அதிகாரத்திற்கு செல்வதே அவசியம் என்ற சமூக நீதி அரசியலை சமரசமின்றி அசுரனில் வெற்றிமாறன் வெளிப்படுத்தினார். வெற்றிமாறன் படத்தில் தொடர்ந்து வன்முறைகள் அதிகம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும் தனது கதை கேட்கும் அழுத்தத்திற்காக மட்டுமே அது வைக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார். ஒரு திரைப்படத்தின் உதவி இயக்குநர் மற்றும் அப்படத்தின் நடிகர் என தொடங்கிய தனுஷ் - வெற்றிமாறன் இருவரின் நட்பும், தேசிய விருதுகளை அள்ளும் அளவுக்கு கூட்டாக கூர் தீட்டியுள்ளது. இந்தக் கூட்டணி மேலும் பல சமரசமற்ற காத்திரமான படைப்புகளை களமிறக்க வேண்டும் என்பதே எல்லோரது ஏகோபித்த எண்ணம்...

Tags:    

மேலும் செய்திகள்