சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி போலீசார் காட்டிய சில அதிரடி நடவடிக்கைகள்

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் காட்டிய சில அதிரடி நடவடிக்கைகளை தற்போது பார்க்கலாம்...
x
சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு குறித்து சிபிசிஐடி போலீசார், பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக, ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் விசாரணைக்கு, போலீசார் முழு ஒத்துழைப்பு அளித்து வருவருவதாக கூறினார்.

இந்த நிலையில், சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள சிசிடிவி தடயங்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. ஆய்வாளர் தேவி தலைமையிலான 2 குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதேபோல், சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார்  தலைமையிலான குழு கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை நடத்தினர். இதனிடையே, டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் பல குழுவாக பிரிந்து ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிசிஐடி எஸ்.ஐ. பிறைச்சந்திரன் தலைமையிலான குழு, ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை அமைந்துள்ள இடத்தை நேரில் பார்வையிட்டது. பின்னர், தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்து சென்ற போது, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் குறித்து, மக்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.  

சிபிசிஐடிஎஸ்.ஐ உலக ராணி தலைமையிலான, குழுவினர் ஜெயராஜ், பென்னிக்ஸின் வீட்டில் விசாரணை நடத்தினர். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள், உறவினர்களிடம் அதிகாரிகள் சம்பவம் குறித்த விவரங்களை கேட்டனர். இதனிடையே கடைவீதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், எஸ்.ஐ சரவணன் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விரைந்தனர். கோவில்பட்டி கிளைச் சிறையில், சிபிசிஐடி ‌ ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் விசாரணை  நடைபெற்றது. சிறை உதவி கண்காணிப்பாளர், சிறை காவலர்கள், ஜெயராஜ், பென்னிக்ஸ்வுடன் இருந்த கைதிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. 

சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தடயவியல் நிபுணர் குழு 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். காவல்நிலைய நுழைவு வாயில் தடுப்பு அமைத்து மூடப்பட்டு, சோதனை நடைபெற்றது. அதேபோல், சம்பவத்தன்று காவல்நிலைய சிசிடிவி கேமிராவில் இருந்து அழிக்கப்பட்ட காட்சிகளை மீட்டெடுக்கும் முயற்சியும் நடைபெற்றது. இதனிடையே,  சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு வந்த டிஎஸ்பி அனில்குமார், எஸ்ஐ சரவணன் ஆகியோர், ஆவணங்களை ஆய்வு செய்தனர். 

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி சிபிசிஐடி போலீசார், அரசு கட்டுபாட்டில் இருந்த நிலையில் சந்தேக மரணம் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரின் இறப்பு குறித்து தனித்தனியாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்